காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் தமிழில் செய்தி வழங்கும் சேவை துவங்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அல்ஹம்துலில்லாஹ். 1998 ஆம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவக்கப்பட்ட, தி காயல் ஆன் தி வெப், 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் என்ற தலைப்பில் முதல் செய்தியுடன் தமிழில் செய்திகள் சேவையை
துவக்கியது. அதற்கு முன்னதாக (நவம்பர் 20, 2000 முதல்) ஆங்கிலத்தில் செய்தி சேவை துவக்கப்பட்டது. இது சில காலமே தொடர்ந்தது.
இத்தருணத்தில் காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு 10 ஆண்டுகளாக தொடர்ந்து செய்தி தந்துவரும் அப்துல் மாலிக் மற்றும் முஹம்மது அலி
(மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி) ஆகியோருக்கும், ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக செய்திகள் அளித்துவரும் எஸ்.கே.ஸாலிஹ்க்கும்
(தாருத்திப்யான்), இவ்வாண்டு முதல் மக்காவிலிருந்து செய்திகள் தர துவங்கியுள்ள ஒய்.எம்.ஸாலிஹ்க்கும், இவ்வாண்டு முதல்
சென்னையிலிருந்து செய்திகள் தர துவங்கியுள்ள எம்.என். புஹாரிக்கும் தி காயல்
ஃபர்ஸ்ட் டிரஸ்ட் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.
மேலும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் மூலம் தங்கள் ஆதரவை வழங்கி வரும் இந்தியா உட்பட உலகெங்கும் வாழும் காய்லர்களுக்கும், நல
மன்றங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், பிற ஸ்தாபனங்களுக்கும் எமது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இணையதளத்தின் நீண்டக்கால நன்மையை கருத்தில் கொண்டு சில மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
காயல்பட்டணம்.காம் பல சிறு இணையதளங்களாக பிரிக்கப்பட உள்ளது. தற்போது இணையதளத்தில் உள்ள பல பக்கங்கள் தனி
இணையதளங்களுக்கு மாற்றப்படும். முதல் கட்டமாக KayalSky.com என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. பிற இணையதளங்கள் படிப்படியாக
செயல்பட துவங்கும். இம்மாற்றங்கள் மார்ச் 2011 க்குள் நிறைவுபெறும். இன்ஷாஅல்லாஹ். இன்னும் சிறந்த சேவைகள் கொடுக்கப்பட
வேண்டும் என்ற காரணத்திற்காகவும், இணையதள பணிகளை பிரித்து பராமரிப்பது எளிதாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் - இம்மாற்றங்கள்
செய்யப்படுகின்றன.
காயல்பட்டணம்.காம் - இம்மாற்றங்களுக்கு பின்னர் - செய்தி மற்றும் அதன் தொடர்பான அம்சங்களை கொண்ட இணையதளமாக மட்டும் செயல்படும். இணையதளத்தில் தற்போது உள்ள பிற அம்சங்கள், பிற இணையதளங்கள் மூலம் தொடரும் என்பதையும் தெரிவித்துகொள்கிறோம்.
காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு செய்தி ஆசிரியர்கள் குழு (Editorial Board) அமைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் செய்திகள் தொடர்பான
முடிவுகளை இக்குழுவே எடுக்கும். அக்குழுவில் உள்ளவர்கள் வருமாறு:-
(1) ஏ.தர்வேஷ் முஹம்மது
(2) சாலை முஹம்மது பஷீர் ஆரிப்
(3) எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம்
(4) எம்.என்.புஹாரி
(5) கே.ஜே.சாஹுல் ஹமீது
(6) எஸ்.கே.ஸாலிஹ்
(7) எம்.எஸ்.முஹம்மது சாலிஹு
இது தவிர - இணையதளத்தில் வெளிவரும் செய்திகள் குறித்த குறைகள், கருத்துகள் பெற நடுவர் (Ombudsman) ஒருவரும் விரைவில்
அறிவிக்கப்படுவார். இவர் இணையதளத்தை நடத்தும் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட்க்கோ,
செய்திகளை முடிவு செய்யும் ஆசிரியர் குழுவிற்கோ தொடர்பில்லாதவராக இருப்பார்.
செய்திகளை விரைவாக வெளியிட - இணையதளத்திற்கு செய்திகள் அனுப்புபவர் -news@kayalpatnam.com என்ற ஈமெயில் முகவரிக்கு தங்கள் செய்திகளை இனி அனுப்பும்படி கேட்டு
கொள்கிறோம்.
தங்கள் ஆதரவும், ஆலோசனைகளும் தொடர்ந்துவர வேண்டுகிறோம்.
- தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட்
|