அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகள் வரும் 15ம் தேதிக்குள் அங்கீகாரத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
தமிழகம், புதுவையில் அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. மார்ச் கடைசி வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பட்டியல்(நாமினல் ரோல்) தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 7.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தொடர் அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கண்டிப்பாக பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. சுயநிதி மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 1992ம் ஆண்டு வரை நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது.
இவற்றில் பல பள்ளிகள், சீரான இடைவெளியில் கட்டிட உறுதித்தன்மையை ஆய்வு செய்வதில்லை. பாதுகாப்பு வசதிகளில் கோட்டைவிட்டு விடுகின்றன. இதனால் 1992ம் ஆண்டுக்குப்பின்பு தொடங்கப்பட்ட பள்ளிகள், 3 ஆண்டுக்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டது. கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப்பின்பு, இந்த உத்தரவு மேலும் கடுமையாக்கப்பட்டது.
இதற்காக அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் இருந்து கட்டிட உறுதித்தன்மை சான்றிதழ், தீயணைப்பு துறையிடம் இருந்து பாதுகாப்பு குறித்த சான்றிதழ்களை பள்ளிகள் பெற வேண்டும். மேலும் ஆசிரியர்கள் பட்டியல், சம்பள பட்டியல் உள்ளிட்ட 35 வகையான ஆவணங்களை தொடர் அங்கீகாரத்தின்போது சமர்ப்பிக்க வேண்டும். இதனால் ஏற்படும் அலைச்சலை கருதி, பல தனியார் பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் உள்ளன.
இந்த ஆண்டு கண்டிப்பாக அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாது என்றும் பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அங்கீகாரம் புதுப்பிக்காத பள்ளிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டும் 25 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
தகவல்:
தினகரன் |