காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு, சின்ன நெசவுத் தெரு, கே.டி.எம். தெரு, அலியார் தெரு மற்றும் இதர பகுதிகளிலிருந்து மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர், மூப்பனார் ஓடை, நார ஓடை என்றழைக்கப்படும் தாயிம்பள்ளிவாசலையொட்டிய பெரிய நெசவுத் தெருவிற்குச் செல்லும் சாலையில், சங்கமிக்கும். கனமழை காலங்களில் மழை நீர்த்தேக்கம் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, இவ்விடம் பெரியதொரு வாய்க்கால் போல காட்சியளிக்கும்.
நடப்பு மழைப்பருவத்தைக் கருத்தில் கொண்டு, இப்பகுதி நகர்மன்ற உறுப்பினரும், காயல்பட்டினம் நகர தி.மு.க. துணைச் செயலாளருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீனின் தொடர்கோரிக்கையின் பேரில், கடந்த நவம்பர் மாதம் 13ஆம் தேதியன்று இந்த ஓடையில், நகர்மன்றப் பொதுநிதியிலிருந்து ரூ.8,75,000 செலவில் புதிதாக கனவாய் கட்டப்பட்டது.
கனவாய் அமைக்கும் பணி நிறைவடைந்து ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக அக்கனவாய் சுமார் 20 அடி அளவுக்கு கரைந்து, சிமெண்ட் கலவைகளுடன் வெற்றிடமாகக் காட்சியளிக்கிறது. எஞ்சியிருக்கும் கனவாய் சுவரும் விரைவில் கரையும் அளவுக்கு வலுவிழந்து காணப்படுகிறது.
தகவல்:
ஏ.டி.ரியாஸுத்தீன்,
பிரதான வீதி, காயல்பட்டினம். |