புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று நடந்தது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் உதவி பேராசிரியர் டாக்டர் இ.விதுபாலா நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேரும், ஒரு நாளைக்கு 2,500 பேரும் புகையிலை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு மரணம் அடைகின்றனர். சிகரெட்டில் 4000 நச்சுப் பொருட்கள் இருக்கிறது. அதில் 56 பொருட்கள் புற்றுநோயை உருவாக்கக் கூடியவை. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய், மாரடைப்பு, ஆண்மைக் குறைவு, நுரையீரல் பிரச்னை, மூளை பாதிப்பு போன்ற நோய்கள் வருகிறது. அவர்களின் வாழ்நாளில் சராசரி 15 ஆண்டு கால வாழ்வையும் இழக்க நேரிடும்.
புகையிலை ஒழிப்பதில் கடை உரிமையாளர்களுக்கும் அதிக பங்கு உள்ளது. பெரிய அலங்காரமான, வண்ணமயமான, ஒளியூட்டப்பட்ட விளம்பர பலகைகள் வைப்பது குற்றமாகும். கடைகளில் ‘புகையிலை ஒரு உயிர்க்கொல்லி’ என்று கண்டிப்பாக விளம்பர பலகை வைத்திருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.
இவ்வாறு டாக்டர் விதுபாலா கூறினார்.
தகவல்:
தினகரன்
|