தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. மிக அதிகமாக திருச்செந்தூரில் 149 மி.மீ., மழை பெய்துள்ளது. மழைக்கு மாவட்டத்தில் இதுவரை 497 வீடுகள் இடிந்துள்ளன.
வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் வடபகுதியான ஓட்டப்பிடாரம், மணியாச்சி, எட்டயபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் குளங்கள் நிரம்பின. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஏராளமான வீடுகளையும் மழை நீர் சூழ்ந்தது. நேற்று மாலை வரையில் கனமழை நீடித்தது. திருச்செந்தூரில் அதிக பட்சமாக 149 மி.மீ. மழை பெய்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்த மழை அளவு:
காயல்பட்டினம் - 63 மி.மீ., குலசேகரபட்டினம் - 48, எட்டயபுரம் - 4, கடம்பூர் - 3, ஓட்டப்பிடாரம் - 4, கீழஅரசடி - 7, விளாத்திகுளம் - 4, வைப்பாறு - 16, கழுகுமலை - 10, ஸ்ரீவைகுண்டம் - 23, கயத்தார் - 23, கோவில்பட்டி - 8, வேடநத்தம் - 10, காடல்குடி - 9, சாத்தான்குளம் - 64, தூத்துக்குடி - 30 மி.மீ.
மாவட்டத்தில் ஏற்கனவே மழைக்கு 487 வீடுகள் சேதமடைந்திருந்தன. நேற்று முன்தினம் பெய்த மழையால் மேலும் 10 வீடுகள் இடிந்தன. திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டத்தில் தலா ஒரு வீடு, ஸ்ரீவைகுண்டத்தில் 8 வீடுகள் இடிந்துள்ளன. மாவட்டத்தில் 45 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. 490 மீட்டர் நெடுஞ்சாலை சேதமடைந்தது. மாநகராட்சி அளவில் 69 கி.மீ. சாலையும், காயல்பட்டினம், கோவில்பட்டி நகராட்சி அளவில் 18 கி.மீ, சாலையும், பேரூராட்சி அளவில் 16 கி.மீ. சாலையும், கிராம பஞ்சாயத்து அளவில் 65 கி.மீ. சாலையும் பாதிக்கப்பட்டுள்ளன.
275 விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. வேம்பார் முதல் பெரியதாழை வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் மகேஷ்வரன் உத்தரவிட்டிருந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மழை சேதங்களை கண்காணிப்பு அலுவலர் சுர்ஜித் சவுத்ரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டு ரூ.194 கோடிக்கு மழையால் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால் தற்போது மழை நீடிப்பதால் சேதமதிப்பும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தகவல்:
தினகரன் |