காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், அப்பகுதிவாழ் காயலர்கள் இன்பச் சிற்றுலா சென்று வந்துள்ளனர்.
இதுகுறித்து, பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் சார்பில், இங்கு வாழும் காயலர்கள் கலந்துகொண்ட இன்பச் சிற்றுலா, 05.12.2010 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்று முடிந்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ்!
“Kadoori Farm & Botanic Garden” என்ற - இயற்கை வளமும், மலைகளும் நிறைந்த பசுமைச் சூழல் மிகுந்த, மனதிற்கு அமைதியைத் தரும் மூலிகைகள் நிறைந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுதில் இரண்டு பேருந்துகளில் போய்ச் சேர்ந்தோம்.
துவக்கமாக அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடினோம். அப்பகுதியில் சுற்றிப் பார்க்கும் இடங்கள் குறித்து அனைவருக்கும் அங்கு விவரிக்கப்பட்ட பின்னர், மழலையர், குழந்தைகள், மாணவ-மாணவியர், சகோதர-சகோதரிகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றாக - பறவைகள் மிகுந்த பகுதி, பழத்தோட்டப் பகுதி, மலைசார் பகுதி, வண்ணக்கிளிகள் மற்றும் பல வகை இயற்கையான மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குச் சென்று ரசித்து வந்தோம்.
லுஹர் தொழுகைக்குப் பின், அவரவர் வீடுகளிலிருந்து கொண்டு வந்த பலவகை உணவுகளை ஒருவருக்கொருவர் பண்டமாற்று செய்து, அனைவரும் அனைத்து வீடுகளின் உணவுப் பதார்த்தங்களையும் பகிர்ந்துண்டது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அதாவது, பல உணவுப் பதார்த்தங்கள் அடங்கிய பெரும் விருந்தே அங்கு நடைபெற்றது எனலாம்.
மதிய உணவுக்குப் பின் சிறிது நேர ஓய்வு... பின்னர், மாணவ-மாணவியருக்கான Arts & Crafts, Painting, Drawing போன்ற Workshop நடைபெற்றது. பெற்றோரும் அவர்களின் குழந்தைகளுடன் பங்கேற்றனர். படங்களுக்கு வண்ணந்தீட்டியும், பல வகை பொருட்களை உருவாக்கியும் மகிழ்ந்தனர்.
பின்னர் அஸ்ர் தொழுகை நடைபெற்றது. இந்த இன்பச் சிற்றுலாவில் பேரவை சார்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் தண்ணீர் பாட்டல், பிஸ்கட், தின்பண்டங்கள், சாக்லேட் ஆகியன அவ்வப்போது வழங்கப்பட்டன.
மாலைப்பொழுதில் அங்கிருந்து அனைவரும் பேருந்தில் புறப்பட்டு வந்தோம். இச்சிற்றுலாவில் சிறப்பு விருந்தினர்களாக, தம்மாம் காயல் நற்பணி மன்ற உறுப்பினர் ஜனாப் நஹ்வீ அபூபக்கர், தாய்லாந்து காயல் நல மன்ற உறுப்பினர் ஜனாப் ஸாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.A.முஹம்மத் நூஹ்,
துணைத்தலைவர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை, ஹாங்காங். |