காயல்பட்டினத்தில் ஆண்டுதோறும் புதிய கல்வியாண்டில், நகரிலுள்ள ஏழை-எளிய மாணவ-மாணவியருக்காக சமுதாயத்தின் பல்வேறு பொதுநல மற்றும் அரசியலமைப்புகள் சார்பில் இலவச பள்ளிச் சீருடைகள், பாடநூற்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வெவ்வேறு அமைப்புகள் தனித்தனியே வழங்கினாலும், பெறுவது காயல்பட்டினம் மக்கள் மட்டுமே என்பதால், ஒரு மாணவருக்கே பல அமைப்பினரும் பாட நூற்கள், பள்ளிச் சீருடைகளை வினியோகிப்பதும், இதன் காரணமாக தகுதியுள்ள சில மாணவ-மாணவியருக்கு இந்த இலவச பொருட்கள் கிடைக்காமற்போவதும் தொடராக நிகழ்ந்து வருகிறது.
இக்குறையைப் போக்கிடும் வகையில், மேற்படி பொருட்களை வினியோகிக்கும் அமைப்பினர் மற்றும் தனி நபர்களை ஒருங்கிணைத்து, விண்ணப்பங்களை மட்டும் ஓரிடத்திலிருந்து வினியோகிக்கச் செய்வதற்காக ஆலோசனைக் கூட்டம் நடத்துவதென, அண்மையில் நடைபெற்ற இக்ராஃ செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில், நேற்று (08.12.2010) இரவு 07.15 மணிக்கு, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்ராஃ தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் வேனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். இக்ராஃ செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் கூட்டத்தின் நோக்கம் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
காயல்பட்டினம் நகரில் செயல்பட்டு வருகிற - ஆண்டுதோறும் இலவச பள்ளிச் சீருடை மற்றும் பாடநூற்களை வினியோகித்து வரும் பொதுநல மற்றும் அரசியல் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள், இலவச பள்ளிச் சீருடைகள் மற்றும் பாட நூற்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை மட்டும் இக்ராஃவைத் தலைமையாகக் கொண்டு அதன் அலுவலகத்திலிருந்தே வழங்குவது குறித்து இக்கூட்டத்தில் நீண்ட நேரம் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டனர்.
இறுதியாக, இக்ராஃ துணைச் செயலர் எஸ்.கே.ஸாலிஹ், இச்செயல்திட்டம் குறித்த இறுதி வடிவத்தை உரையாக வழங்கினார்.
இறுதியில், வரும் 20.12.2010 அன்று மீண்டும் கூடுவதெனவும், அக்கூட்டத்தில் மேற்படி செயல்திட்டத்திற்கு அந்தந்த அமைப்புகளின் சார்பில் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அல்லது விலகல் தகவலைத் தருவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஏதேனும் ஓரமைப்போ, சில அமைப்புகளோ இச்செயல்திட்டத்திலிருந்து விலகினாலும், ஒப்புக்கொண்ட அமைப்புகளைக் கொண்டு ஒருங்கிணைந்த முறையில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என்றும், விலகிய அமைப்புகளிடமிருந்து அவர்கள் வினியோகிக்கும் மாணவ-மாணவியரின் விபரப்பட்டியல் பரிசீலனைக்காக கேட்டுப் பெறப்படும் என்றும்,
அதனடிப்படையில், புதிய கல்வியாண்டில் விண்ணப்பங்கள் மட்டும் இக்ராஃவின் தலைமையின்கீழ் இக்ராஃ அலுவலகத்திலிருந்து வினியோகிக்கப்படும் என்றும், வினியோக முறைமைகள் குறித்த செயல்திட்டங்கள் 20ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு செய்யப்படும் என்றும் மேலும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வாவு புகாரீ, ஜாஹிர் ஹுஸைன், ஏ.எஸ்.முஹம்மத் நூஹ் ஃபிர்தவ்ஸ் ஆகியோரும்,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், ஹாஃபிழ் வி.எம்.எம்.மொகுதூம் அப்துல் காதிர், எம்.ஏ.எஸ்.முஹ்யித்தீன் ஆகியோரும்,
காயல்பட்டினம் பைத்துல்மால் சார்பில், ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர், ஹாஜி டூட்டி எம்.எஸ்.எல்.சுஹரவர்த்தி ஆகியோரும்,
கற்புடையார் வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி சார்பில் கே.அப்துர்ரஹ்மான், கே.வி.ஏ.டி.புகாரீ ஹாஜி அறக்கட்டளை சார்பில் முஹம்மத் ஆஷிக், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஆகியோரும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், செயலர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், துணைச் செயலாளர்கள் கே.எம்.டி.சுலைமான், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தகவல்:
K.M.T.சுலைமான்,
துணைச் செயலாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |