காயல்பட்டினம் நகரிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிவந்த முத்துச்சுடர் மாத இதழ், அதன் ஆசிரியரான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீ அவர்களின் மறைவிற்குப் பின் வெளிவராமற்போனது.
இந்நிலையில், தற்காலத்திற்கேற்ப மெருகூட்டி, அந்த மாத இதழை மீண்டும் வெளியிடுவது குறித்து, காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவிலுள்ள முத்துச்சுடர் ஆசிரியரின் மகன் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ இல்லத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் கத்தரிலுள்ள தோஹா நகரில், இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் பின்வருமாறு:-
நமதூரின் சமுதாய மாத இதழான நூருல் ஜுமான் “முத்துச்சுடர்” பத்தரிக்கை, கடந்த 1975ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 28 வருடங்களாக, அதன் ஆசிரியர் அல்ஹாஜ் நூகுத்தம்பி ஆலிம் ஜுமானீ அவர்களால் நடத்தப்பட்டு வந்ததை அனைவரும் அறிவோம். ஆசிரியர் அவர்களின் மறைவிற்குப் பின், அப்பத்திரிக்கை வெளியீடு நின்று போனது.
இந்நிலையில், முத்துச்சுடர் அபிமானிகளின் தொடர் வலியுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, மீண்டும் புதுப்பொலிவுடன், வரும் 2011 ஆங்கிலப் புத்தாண்டிலிருந்து வெளியிடுவதென, கத்தர் - தோஹாவிலுள்ள கே.வி.ஏ.டி. இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு, “முத்துச்சுடர்” ஆசிரியர் மறைந்த நூஹுத்தம்பி ஆலிம் அவர்களின் பேரன் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை தலைமை தாங்கினார்.
கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், முஸ்லிம் லீக் முஸ்தஃபா, ஷவ்கத், இ.டி.ஏ. பொறியாளர் அப்துல்லாஹ், ஹாஜி சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா, டி.வி.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், கே.வி.ஏ.டி. சகோதரர்கள், ஃபாயிஸ் மற்றும் கத்தர்வாழ் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டு, தமது ஆலோசனைகளையும், ஆதரவையும் தெரிவித்தனர்.
இதுபற்றி மவ்லவீ எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை தெரிவிக்கையில், இன்றைய காலத்திற்கேற்ப அரசியல், கல்வி, மருத்துவம், சமையல், திருக்குர்ஆன் விளக்கவுரை, பிரார்த்தனை மஜ்லிஸ், மார்க்க கேள்வி - பதில், பொருளாதாரம், மேதைகளின் வரலாறு, சமூகக் கட்டமைப்பைப் பிரதிபலிக்கும் கதை, கவிதை, கட்டுரைகள், துணுக்குகள் உள்ளிட்ட படைப்புகளுடன் “முத்துச்சுடர்” புதுப்பொலிவுடன் வெளியிடப்படவிருக்கிறது.
இந்நூலில் வெளியிடுவதற்காக பொதுமக்களாகிய உங்கள் யாவரின் தரமான படைப்புகளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். படைப்புகளை அனுப்பும் முறைமைகள் குறித்து விரைவில் தகவல் தரப்படும்... என்றார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர்,
தோஹா, கத்தர். |