நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயிலின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இவ்வழித்தடத்திலுள்ள தண்டவாளங்களை உறுதிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
நெல்லை - திருச்செந்தூர் இடையே தினமும் 8 முறை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நெல்லை - திருச்செந்தூர் இடையே ஆங்கிலேயேர் காலத்தில் அமைக்கப்பட்ட மீட்டர்கேஜ் பாதை இருந்தது. ரயில் சேவை மற்றும் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு மீட்டர்கேஜ் அகல பாதையாக மாற்றப்பட்டது.
அப்போது தண்டவாளத்தின் உறுதித்தன்மையை பரிசோதித்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மணிக்கு 100 கி.மீ வேகத்திற்கு மேல் செல்ல அனுமதியளித்தார். இருப்பினும் இந்த வழித்தடத்தில் ரயில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் இயக்கப்படுவதால் பயண நேரம் ஒன்றே கால் மணி முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஆகிறது. நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே பயண நேரத்தை ஒரு மணி நேரமாக குறைப்பதற்காக ரயிலின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக இவ்வழித்தடத்தில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன. மேலும் தண்டவாளம் பேக்கிங் மெஷின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. இப்பணிகள் முடிந்த பிறகு ரயிலின் வேகம் மணிக்கு 90 கி.மீட்டராக அதிகரிக்கப்படும்.
இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது :-
நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயிலின் வேகத்தை அதிகரிக்க திட்டமிட்டு அதற்கேற்ப தண்டவாளத்தை உறுதிப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வழித்தடத்தில் நெல்லை, பாளை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் என 12 ரயில் நிலையங்கள் உள்ளன. இங்கு ரயில்கள் நிற்பதால் பயண நேரம் அதிகரிக்கும். மேலும் கச்சனாவிளை & குரும்பூர் மற்றும் ஆறுமுகநேரி & காயல்பட்டிணம் இடையே குறைந்த தூரமே இருப்பதால் ரயிலின் வேகம் அதிகரித்தாலும் பயண நேரம் பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை. சிக்னல் உள்ளிட்ட பிரச்னைகள் எதுவும் இல்லையெனில் ஒரு மணி நேர பயணத்தில் நெல்லை மற்றும் திருச்செந்தூருக்கு சென்று விடலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
தகவல்:
தினகரன் |