காயல்பட்டினத்தில் 18 வயதுக்கும் குறைவானோருக்கு பீடி, சிகரெட் உள்ளிட்ட புகைக்கும் பொருட்களை விற்பதைத் தவிர்க்குமாறு விற்பனைக் கடைகளை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை வலியுறுத்த வேண்டுமென சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் (KWAS - க்வாஸ்) செயற்குழுக் கூட்டம் 04.12.2010 அன்று மாலை 05.00 மணிக்கு, மன்றச் செயலர் ரஷீத் ஜமான் தலைமையில், மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஹாஃபிழ் ஹஸன் ளாஃபிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு பெற்றிடும் பொருட்டு சில காலமாக சிங்கையில் தங்கியிருந்த காயலர்களான நிஃமத்துல்லாஹ், ஹஸன் மவ்லானா, ஹஸன் ளாஃபிர் ஆகியோருக்கு நல்ல வேலைவாய்ப்புகள் அமைந்துள்ளதையடுத்து, அவர்கள் மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக்கப்பட்டு, இக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இன்னும் வேலைவாய்ப்புக்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் மன்ற உறுப்பினர் ஷேக் அப்துல் காதிரின் சகோதர்ர் ஜக்கரிய்யாவுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்க மன்றத்தின் சார்பில் தொடர்ந்து உதவிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நலிந்தோருக்கு சமையல் பொருட்களுதவி - கணக்கறிக்கை தாக்கல்:
கடந்த ஹஜ் பெருநாளின்போது, நகரின் நலிந்தோருக்காக மன்றத்தால் வழங்கப்பட்ட அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி குறித்த விபர அறிக்கையை துணைச் செயலர் மொகுதூம் முஹம்மத் சமர்ப்பித்தார். ரூபாய் முப்பத்தாராயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தைந்து தொகையை செலவாகக் கொண்டு, நகரின் நலிந்த 37 குடும்பங்களுக்கு இச்சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
இந்த வினியோகத்தில் ஈடுபட்டு, சிறப்புற நடத்தித் தந்தமைக்காக மன்ற உறுப்பினர் பாக்கர் ஸாஹிப், நகரின் பொதுநல ஆர்வலர் மஹ்மூத் லெப்பை ஆகியோருக்கு மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கப்பட்டது. அடுத்த வினியோகம், 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வரவு செலவு கணக்கறிக்கை தாக்கல்:
இக்கூட்டத்தில் மன்றத்தின் வரவு செலவு கணக்கறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை சந்தா தொகை நிலுவையிலுள்ளோர், இம்மாததுடன் நடப்பு கணக்காண்டு நிறைவடைவதைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தமது நிலுவை சந்தா தொகையை மன்றத்தில் செலுத்துமாறு கூட்டத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலுவையிலுள்ள உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு நிலுவைத் தொகையைப் பெற்றிடும் பொறுப்பு மன்ற உறுப்பினர் கே.எம்.டி.ஷேக்னா வசம் ஒப்படைக்கப்பட்டது.
நலிந்த நகர்மக்களுக்காக இன்னும் அதிகளவில் உதவிப்பணிகளை செய்திடும் பொருட்டு, உறுப்பினர்கள் தமது சந்தாத் தொகைகளை இன்னும் அதிகரித்து வழங்கலாம் என உறுப்பினர் ஹரீஸ் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து கலந்தாலோசனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சந்தா தொகையில் ஒரு பகுதியை சேமித்தல்:
மன்றத்தின் வருமானத்தைப் பெருக்கிடும் பொருட்டு, உறுப்பினர் சந்தாத் தொகை நிதியிலிருந்து ஒரு பகுதியை தனியே ஒதுக்கி வைக்கலாம் என உறுப்பினர் முஹம்மத் அலீ சென்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
அவ்வாறு ஒதுக்கப்படும் தொகையைக் கொண்டு, மன்றத்தின் வருமானத்தைப் பெருக்கிடும் வகையில் தங்கத்தில் முதலீடு, நிலம் வாங்கல் உள்ளிட்டவற்றைச் செய்யலாம் என உறுப்பினர்கள் முஹம்மத் அலீ, உதுமான் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். அடுத்த நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என அப்போது உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
வரும் ஓராண்டிற்கான செலவை நிதி ஒதுக்கீட்டு அறிக்கையாக (பட்ஜெட்) வெளியிடலாம் என உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்த கருத்து ஏற்கப்பட்டு, அடுத்த (2011) நிதியாண்டிலிருந்து அது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃவிற்கு பொருளுதவி - தலைவர் முடிவுக்கு வரவேற்பு:
இக்ராஃவின் அலுவலகத் தேவைக்காக மன்றத்தின் சார்பில் 5 நாற்காலிகள் வழங்கப்படும என அண்மையில் நடைபெற்ற இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில், மன்றத் தலைவரும், இக்ராஃ தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் வெளியிட்ட அறிவிப்புக்கு இக்கூட்டம் வரவேற்றுள்ளது.
அத்துடன், புதிதாக இக்ராஃவிற்கு 10 உறுப்பினர்களைச் சேர்ப்பதென தீர்மானிக்கப்பட்டது. அப்பணிக்கான ஒருங்கிணைப்பாளராக, மன்ற துணைச் செயலர் மொகுதூம் முஹம்மத் நியமிக்கப்பட்டார்.
புதிய உண்டியல் வினியோகம்:
மன்றத்தின் வருமாத்தைப் பெருக்கும் மற்றொரு திட்டமான உண்டியல் மூலம் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ், இதுவரை உண்டியல் பெறாத உறுப்பினர்களுக்கு புதிய உண்டியல்களை வழங்கும் பொறுப்பு உறுப்பினர் உமர் ரப்பானீயிடம் ஒப்படைக்கப்பட்டது. வரும் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனைத்து உண்டியல்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை கிழக்கு கடற்கரை பூங்காவில் (East Coast Park) 15.01.2011 அன்று நடத்தலாம் என உத்தேசமாக தேதியும், இடமும் முடிவு செய்யப்பட்டது. விரைவில் அது குறித்து உறுதியான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புதிய இலச்சினை (Logo) உருவாக்கம்:
மன்றத்திற்கான புதிய இலச்சினையை உருவாக்கும் பொறுப்பு உறுப்பினர் ஹஸன் மவ்லானா வசம் ஒப்படைக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் புதிய இலச்சினையை உருவாக்கித் தருமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
சிறப்பு மலர் வெளியீடு:
ஏற்கனவே முந்தைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட படி, சிங்கப்பூர் காயல் நல மன்றம் - KWAS அமைப்பின் சார்பில் சிறப்பு மலர் வெளியிடுவதென தீர்மானிக்கப்பட்டு, அதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
மன்றச் செயலர் ரஷீத் ஜமானைத் வழிநடத்துபவராகக் கொண்டு, மொகுதூம் முஹம்மத், சாளை நவாஸ், ஏ.எம்.உதுமான், கே.எம்.டி.ஷேக்னா, இஸ்மத் ஷாஜஹான், முஹம்மத் அலீ, ஹரீஸ், ஹஸன் மவ்லானா ஆகிய உறுப்பினர்கள் இச்சிறப்பு மலருக்கான ஏற்பாட்டுக் குழுவினராக நியமனம் செய்யப்பட்டனர்.
மன்ற உறுப்பினர்கள், கவிதை, கட்டுரை, வரலாற்றுத் தகவல்கள், துணுக்குகள் உள்ளிட்ட தமது படைப்புகளை kwasingapore@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
காயல்பட்டினத்திலிருந்து இம்மலரை வடிவமைக்கும் பொறுப்பாளர் அடுத்த கூட்டத்தில் நியமிக்கப்படுவார் எனவும், இதுகுறித்து மேலும் கலந்தாலோசனை செய்திடுவதற்காக 12.12.2010 அன்று கூடுவதெனவும், அதற்கான நேரம், இடத்தை மன்ற துணைச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் தெரிவிப்பார் எனவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
நகரில் புற்றுநோய் விழிப்புணர்வு:
நகரில் புற்றுநோய் குறித்து பொதுமக்களை முழுமையாக விழிப்புணர்வடையச் செய்வதற்கான அனைத்து ஒத்துழைப்புகளும் மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களாக காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் புற்றுநோய் குறித்து தொடராக வெளியிடப்பட்டு வரும் அரிய தகவல்களடங்கிய செய்திகள் மன்றத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும், நகரில் புற்றுநோய் விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனியொரு குழு அமைக்கப்பட வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இளம் வயதினருக்கு சிகரெட் விற்பனை தவிர்ப்பு:
நகரில், 18 வயதுக்கும் குறைவானோருக்கு பீடி, சிகரெட் உள்ளிட்ட புகைப்பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட கடைகளை வலியுறுத்துமாறு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையை மன்றம் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
உறுப்பினருக்கு மண முன்வாழ்த்து:
26.12.2010 அன்று திருமணம் செய்யவுள்ள மன்ற உறுப்பினர் பி.எஸ்.எம்.காதருக்கு மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அந்நாளில் ஊரிலிருக்கும் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் தனது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு வருங்கால மணமகனும், மன்ற உறுப்பினருமான பி.எஸ்.எம்.காதர் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
விவாதிக்க வேறு எதுவும் இல்லாத நிலையில், உறுப்பினர் ஹரீஸ் துஆவுடன், இரவு 07.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. மன்ற செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |