பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமூக விரோதிகள் ஊடுருவ முடியாதபடி மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ரயில், பஸ், விமான நிலையங்கள், வர்த்தக நிறுவனங்களில் தனிப்படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். வழிபாட்டு தலங்கள், மார்க்கெட் பகுதிகள், ஷாப்பிங் மால்களிலும் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப் படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 43 பழைய குற்றவாளிகள், 62 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை நாளை வரை நடக்கும் என்று கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
டிஜிபி லத்திகா சரண் கூறுகையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் அந்தந்த பகுதி மாவட்ட, நகர, மாநகர போலீசார் ஈடுபடுவார்கள். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
தகவல்:
தினகரன்
|