ஐக்கிய அரபு அமீரகம் துபையில், தமிழ் பேசும் இந்திய முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் (ஈமான்). இவ்வமைப்பின் 35ஆம் ஆண்டு விழா 02.12.2010 வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை துபை முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற்றது.
விமரிசையாக நடத்தப்பட்ட இவ்விழாவில், துவக்கமாக முஹிப்புல் உலமா முஹம்மத் மஃரூப் இறைவசனங்களை ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையது எம்.ஸலாஹூத்தீன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அஹ்மத் முஹ்யித்தீன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
பின்னர் தலைவர் தனது தலைமையுரையில், ஈமான் அமைப்பின் 35ஆம் ஆண்டு விழா நிகழ்வில் நமது தமிழ் முஸ்லிம்கள் பெருமளவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருப்பது பெருமகிழ்வளிப்பதாகத் தெரிவித்தார். அவரது உரையில் கடந்த கால பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார். ஒவ்வொருவரது தனித்திறனையும் மேம்படுத்த ஈமான் அமைப்பின் நிர்வாகக் குழுவினர் அதற்கேற்ப நிகழ்வுகளையும் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்விழாவில், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அமீரக நிகழ்வுகள் தன் மனதினை விட்டு நீங்காமல் இடம்பெற்று வருவதை பல்வேறு நினைவுகளுடன் விவரித்தார். மேலும் சமுதாயப் பணிகளில் தனது பங்களிப்பினை விவரித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற இத்தகுதியை தான் ஒருபோதும் மதிப்புமிக்க ஒரு பதவியாகக் கருதியதில்லை என்றும், இதன் மூலம் தொகுதி மக்களுக்கும், தான் சார்ந்த சமுதாயத்திற்கும் ஏதேனும் நன்மைகள் செய்ய வாய்ப்பிருப்பின் அந்த வாய்ப்புகளை மட்டும் தவறாமல் பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் முஸ்லிம்களுக்கான வழிபாட்டு அறை (Prayer Hall) கட்டப்பட்டது குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்:-
பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் நான் வந்திறங்கிய அத்தருணம் தொழுகை நேரமாகும். தொழுவதற்கு வாய்ப்பான இடம் அங்கு இல்லாத நிலையில், நான் வெளியில் இங்குள்ள விமான நிலைய நடவடிக்கைகள் முடிந்த பின் எனது அறைக்குச் சென்று தொழுவதென்றால், அதற்குள் தொழுகை நேரம் கடந்துவிடும் என்ற நிலை.
இறைவன் அப்போது என் சிந்தனையில் ஓர் உதிப்பை ஏற்படுத்தினான். அதனடிப்படையில் மத்திய அமைச்சர் பிரஃபுல் படேலை நான் சந்தித்து, “புதிதாகக் கட்டப்பட்டு வரும் இந்த விமான நிலையத்தில் முஸ்லிம்களுக்காக ஒரு தொழுகை அறை ஏற்பாடு செய்து தரலாமே...?” என்று கேட்டுக்கொண்டேன். எழுத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். நானும் ஒருபக்க மடலை எழுதி அவர் சார்ந்த துறையிடம் சமர்ப்பித்தேன்.
கோரிக்கையைப் பார்த்த அவர், “இந்நாடு சமய சார்பற்ற நாடு என்பதை நாமறிவோம்... தாங்கள் கேட்பது போல இதர சமுதாயத்து மக்களும் கேட்டால் விமான நிலையம் முழுக்க வழிபாட்டுத் தலங்களைத்தான் பார்க்க முடியும்” என்றார்.
அதிலுள்ள நியாயம் எனக்குப் புரிந்தாலும், நமக்கு அந்த வசதி இல்லையென்றால் நாம் தொழுகையை விட வேண்டிய நிலை வருகிறதே... என்று யோசித்த நிலையில் அவரிடம், “மற்ற மதங்களுக்கு அவர்கள் விரும்பிய நேரத்தில் வணக்க வழிபாடுகளைச் செய்துகொள்ள வழியிருக்கிறது... ஆனால் முஸ்லிம்களுக்கோ, விதிக்கப்பட்ட நேரத்தில்தான் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்” என்று விபரமாக விளக்கிக் கூறினேன்.
இதனை கனிவுடன் கேட்டுக்கொண்ட அவர், “அவ்வாறெனில், இப்போது தாங்கள் சொன்னதை அப்படியே விபரமாக மற்றொரு விண்ணப்பத்தில் எழுதித் தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார். நானும் மீண்டும் மூன்று பக்கத்தில் மடல் எழுதி, அதில் எனது கோரிக்கையிலுள்ள நியாயத்தை விபரமாகக் குறிப்பிட்டிருந்தேன்.
சில நாட்கள் கழித்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில், “தங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டது! டில்லி விமான நிலையத்தில் முஸ்லிம்களுக்கு தொழுகையறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது!!” என்றார். எனக்கோ அத்தருணம் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. இந்தக் காரியம் நிறைவேற, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற இப்பொறுப்பு காரணமாக அமைந்த்தை எண்ணி, அந்த இடத்திலேயே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன்.
இதை நான் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் பெருமைக்காக அல்ல! மாறாக, இந்த தகவல் உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் அனைவருக்கும் அது நிச்சயம் மகிழ்வைத் தரும் என்பதற்காகத்தான்!
இவ்வாறு அவர் தெரிவித்தார். சிறப்பு விருந்தினருக்கு ஈமான் அமைப்பின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசுகளை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் கல்விக்குழுத்தலைவர் பி.எஸ்.எம்.ஹபீபுல்லாஹ், இ.டி.ஏ. - எம்.என்.இ. பிரிவின் நிர்வாக இயக்குனர் அன்வர் பாஷா உள்ளிட்டோர் வழங்கினர்.
துணைத்தலைவர் எம்.அப்துல் கத்தீம் நன்றி கூறினார். ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.முஹம்மது தாஹா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை, காயல் யஹ்யா முஹ்யித்தீன், முதுவை ஹிதாயத், கீழை ஹமீது யாசின், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், திருப்பனந்தாள் ஜாஹிர் உசேன் உள்ளிட்ட ஈமான் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இவ்விழாவிற்கு இ.டி.ஏ. அஸ்கான் ஸ்டார், ஆலியா ட்ரேடிங், ஜோர்டானோ, ஸ்டார் மெட்ரோ ஹோட்டல், திருச்சி வெல்கேர் மருத்துவமனை, யும்மி இந்தியன் ரெஸ்டாரெண்ட், ஜெனார்ட் வாட்சஸ், பிளாக் துலிப் பிளவர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அணுசரனை வழங்கியிருந்தன.
தகவல்:
முதுவை ஹிதாயத்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம்.
இவ்விழாவில் திரளான காயலர்கள் உள்ளிட்ட - தமிழ்பேசும் அமீரகம் வாழ் முஸ்லிம் ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர். மதிய உணவு நேரத்தில் தனியே ஒன்றுகூடிய காயலர்கள், பிரியாணி, சிக்கன் 65, வாழைப்பழம் அடங்கிய - விழாக்குழுவினரால் வழங்கப்பட்ட மதிய உணவுப் பொதியை புல்தரையில் இணைந்தமர்ந்து சாப்பிட்டனர். பின்னர் அங்கேயே நீண்ட நேரம் தமக்கிடையில் நகர் நடப்புகள் குறித்து பேசிக்கொண்டனர்.
பின்னர் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மானை நேரில் சந்தித்து, நகர்நடப்புகள் குறித்து பேசிக்கொண்டனர்.
|