காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளை ஆராய்ந்து அதைத் தடுக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்படும் செயல்திட்டத்திற்கு முழு ஆதரவளிப்பதென்றும், இதுகுறித்து அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் கடிதம் எழுதுவதென்றும் கத்தர் காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கத்தர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 03.12.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் மதியம் 01.15 மணிக்கு, மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையில், அவரது இல்லத்தில் நடைபெற்றது. காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றச் செயலாளர் வி.எம்.டி.அப்துல்லாஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர் தலைவர் தனது முன்னுரையில், மன்றம் துவக்கப்பட்டு மூன்றாண்டுகளாகிறது என்றும், தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலமான இரண்டாண்டுகள் நிறைவுற்றுவிட்டதால், தகுதியான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்து மன்றத்தை தொடர்ந்து சிறப்புற வழிநடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
அதுகுறித்து சுமார் 30 நிமிடங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் தவிர, பொதுக்குழு உறுப்பினர்களிலும் கூட ஆர்வமுள்ள பலர் இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, வரும் பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கலாம் என்று செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட எஸ்.கே.ஸாலிஹ் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில்,
அமீரகத்தில் நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்காக நான் வந்த இடத்தில், எனது இருப்பைக் கவனத்தில் கொண்டு இங்கு செயற்குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து என்னை அழைத்தமைக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்...
புற்றுநோய் பரவல் தடுப்பு செயல்திட்டம்:
புற்றுநோய் குறித்து நகர மக்களுக்கு முறையான விழிப்புணர்வைத் துவக்கி வைத்த உங்கள் மன்றத்திற்கு நகர மக்களின் சார்பில் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நோய் பரவலுக்கான காரணம், அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக தங்கள் மன்றத்துடன் இணைந்து காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை ஒத்துழைப்பதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. காலத்திற்கேற்ற சரியான முடிவை தக்க சமயத்தில் தெரிவித்தமைக்காக அவர்களுக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நகர் மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் இரு மன்றங்கள் தவிர, நகரில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மற்றும் சில பொதுநல அமைப்புகளும் இதுகுறித்து தனித்தனியே சிந்தித்து, அவர்களுக்குத் தெரிந்த பல வழிமுறைகளின்படி எப்படியேனும் இந்நோயை இந்த ஊரிலிருந்து அகற்றவேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர்.
இவர்கள் அனைவரின் தனித்தனி செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, இந்த ஒன்றுக்காகவே பரவலாக உறுப்பினர்களை நியமித்து அமைப்புக்குழு ஒன்றை நிறுவி, அக்குழுவின் மூலம் ஒரே அலைவரிசையில் காரியமாற்றினால் நமது உழைப்பு, நேரம், செலவு, சிரமம் அனைத்திற்கும் முழுப்பலன் கிடைக்கும். இதுகுறித்து தங்கள் மன்றத்தின் சார்பில் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
புற்றுநோய் தடுப்பு விஷயத்தில் யார் முன்னின்று செயல்திட்டம் வகுத்து செயல்பட்டாலும் அவர்களுடைய தலைமையின்கீழ் இணைந்து ஒத்துழைக்க ஆயத்தமாக இருப்பதாக தங்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் தலைவர் தெரிவித்தது அவர்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது. எப்படி செய்தாலும், அதன் விளைவு நன்மையாக இருக்க வேண்டுமென்பதே நம் யாவரின் பேரவா!
நகரில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு:
தற்சமயம் நம் நகரில் விரும்பத்தகாத பல நிகழ்வுகள் அடிக்கடி நடந்துவருதைப் பார்க்கும்போது, எங்கே நமது கட்டுப்பாடுகள் சிதைகிறதோ அல்லது சிதைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பில் 24.11.2010 அன்று காலையில், நகரின் முக்கிய பொதுநல அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, “வருங்காலத்தில் காயல்பட்டினம் - செயல்திட்ட முன்வடிவு” என்ற பெயரில் செயல்திட்ட முன்வடிவை துவக்கமாக உருவாக்கி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகத்தின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த முன்வடிவை சமர்ப்பித்துள்ள பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து இதுவிஷயமாக விவாதிக்க வேண்டும் என பேரவை பெரியவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த இறுதி முடிவு அவர்களுடன் கலந்தாலோசனை செய்த பின் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
மத்ரஸா மாணவர்களுக்கும் இலவச சீருடை:
பள்ளிக்கூட மாணவ-மாணவியருக்கு இலவச சீருடைகள் வழங்கப்படுவது போல மத்ரஸா மாணவ-மாணவியருக்கும் சீருடைகள் வழங்கலாம் என கருத்து முன்வைக்கப்பட்டது.
நகரில் அனைத்து மத்ரஸாக்களுக்கும் சீருடை விதிக்கப்படவில்லை என்பதாலும், சீருடை விதிக்கப்பட்டுள்ள மத்ரஸாக்களுக்கு இலவச வினியோகம் செய்யும் விஷயத்தில், நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்து, அந்தந்த நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பின் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
தீர்மானம் 1 - நிர்வாக புதுப்பிப்பு:
மன்றத்தின் நிர்வாகத்தைப் புதுப்பிக்கும் செயல்திட்ட முன்வடிவை எதிர்வரும் பொதுக்குழுவில் முன்வைத்து, பரிசீலனைக்குப் பின் இறுதி முடிவு செய்யப்படும் என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 2 - உள்ளூர் பிரதிநிதி:
எஸ்.கே.ஸாலிஹ் சம்மதித்தையடுத்து, அவரை மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியாக இக்கூட்டம் நியமிக்கிறது. மன்றத்தால் வெவ்வேறு பருவங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதை மட்டுமே அவரது பணியாக இக்கூட்டம் விதிக்கிறது.
தீர்மானம் 3 - வருங்கால காயல்பட்டினம் செயல்திட்ட முன்வடிவு:
வருங்கால காயல்பட்டினம் குறித்து மன்றத்தால் பெறப்பட்டுள்ள செயல்திட்ட முன்வடிவு குறித்து வரும் பொதுக்குழுவில் கலந்தாலோசித்து முடிவெடுக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை 17.12.2010 அன்று, மன்றப் பொருளாளர் எம்.ஆர்.ஷாஹுல் ஹமீத் இல்லத்தில் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
கூட்ட நிரல் மற்றும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக, (1) முஹம்மத் முஹ்யித்தீன், (2) ஃபைஸல் ரஹ்மான், (3) எம்.எஸ்.முஹ்யித்தீன் என்ற மச்சான்ஜி, (4) ஷாஹுல் மீரான் ஆகியோரை ஒருங்கிணைப்புக் குழுவினராக இக்கூட்டம் நியமிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் நன்றி கூற, எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
முஹம்மத் யூனுஸ்,
துணைத்தலைவர்,
காயல் நல மன்றம், கத்தர். |