அறிவியல் முன்னேற்றம் காரணமாக அவ்வப்போது புதுப்புது கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, நாளடைவில் பொதுமக்களின் உடலுழைப்பு முற்றிலும் அற்றுப்போனது.
அம்மிக்குப் பகரமாக மிக்ஸி என்றும்,
ஆட்டு உரலுக்குப் பகரமாக க்ரைண்டர் என்றும்,
கிணற்றுத் தண்ணீரை தலா மூலம் எடுத்துக் குளிக்கும் நிலை மாறி, ஓவர் டேங்க் வசதி என்றும்,
கையால் சோப்பு கொண்டு துணி துவைத்த நிலை மாறி வாஷிங் மெஷின் என்றும்,
அன்றன்றைய உணவை அன்றே சமைத்து அன்றே சாப்பிடும நிலை மாறி, ரெஃப்ரிஜிரேட்டர் அல்லது ப்ரிட்ஜ் என்றும்,
வேலைகளுக்கிடையில் எப்போதாவது டிவி பார்ப்பது என்ற நிலை மாறி டிவி பார்ப்பதற்கிடையில் எப்போதாவது வேலை செய்வதென்றும்,
நடந்தோ, மிதிவண்டியிலோ சென்ற நிலை மாறி பைக், கார் என்றும்,
அலுவலகங்களுக்கு மாடிப்படி ஏறிய நிலை மாறி லிஃப்ட் என்றும்,
இயற்கைக் காற்றை சுவாசித்த நிலை மாறி மின்விசிறி என்றும், பின்னர் ஏ.சி. என்றும்...
இவ்வாறாக மனித குலத்தின் உடல் உழைப்பு முற்றிலும் மறக்கடிக்கப்பட்டு, அன்றாட வாழ்வின் அனைத்து செயல்பாடுகளுக்கும் கருவிகளையும், அதற்கான மின்சாரத்தையும் மட்டுமே நம்பி உடல் நலனையும், பொருளாதாரத்தையும் தெரிந்தே இழந்து வருவது இன்று உலகின் அனைத்துப் பாகங்களிலும் நடைமுறைக்கு வந்துவிட்ட ஒன்று. அதற்கு காயல்பட்டினமும் விதிவிலக்கில்லை.
அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் நகரில் நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் தமதில்லங்களில் சேகரித்துக் கொள்வதற்காக அடிபைப் (அடிபம்பு) வசதி அனைத்து வீடுகளிலும் இருந்தும் இல்லாதது போல் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து வீடுகளிலும் தண்ணீரைத் தேக்கி வைப்பதற்காக நீர்த்தொட்டிகள் இல்லங்களில் அமைக்கப்பட்டிருக்கும். அனைத்து இல்லங்களிலும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதையடுத்து அத்தொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, ஷவர் பாத் எனும் பூக்குளியல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் காரணமாக அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில வீடுகளில் மட்டுமே மின் மோட்டார் நீரேற்றி பொருத்தப்பட்டிருந்த நிலை மாறி, இன்று அது இல்லாத வீடே நகரில் இல்லை என்று சொல்லுமளவுக்கு அனைத்து வீடுகளிலும் பொருத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகத்தால் குடிநீர் வினியோகிக்கப்படும் நேரங்களில், நகரின் பெரும்பாலான வீடுகளில் இதுபோன்ற மோட்டார்களைப் பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சுவதன் மூலம் பகிரங்கமாக விதி மீறும் நிலை பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. காயல்பட்டினத்திலும் நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரும் பெரும்பாலான இல்லங்களில் இதுபோன்றே உறிஞ்சப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக நேர்மையாக அடிபைப்பை பயன்படுத்தி குடிநீர் எடுக்க நினைப்போருக்கு ஒரு சொட்டு நீர் கூட எடுக்க முடிவதில்லை. இதனால் தினமும் அவர்கள் மனம் குமுறி, இறுதியில் இதை விட்டால் வேறு வழியில்லை என்று அவர்களும் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சத் துவங்கிவிட்டனர். ஆக, ஒவ்வொரு தெருவிலும் விரல் விட்டு எண்ணுமளவுக்குள்ள மக்களே இயற்கையான அடிபைப் முறையை இன்னும் நம்பிக்கொண்டு “இளவு காத்த கிளி” போல காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நகரில் சுழற்சி முறை மின்தடை நேரம் ஏப்ரல் 01ஆம் தேதி முதல் காலை 06.00 மணியிலிருந்து 08.00 மணி வரை என்று ஆக்கப்பட்டதையடுத்து, குடிநீர் வினியோகிக்கப்படும் அந்நேரத்தில் மின் மோட்டாரைப் பயன்படுத்த இயலாததால் வேறு வழியின்றி அனைத்து வீடுகளிலும் அடிபைப் பயன்படுத்தப்படுகிறது.
இன்று காலையில் குடிநீர் வினியோகிக்கப்பட்டபோது நகர வீதிகளில் அடிபைப் ஒலியை காது குளிர அனைத்து இல்லங்களிலிருந்தும் கேட்க வாய்ப்பு கிடைத்துள்ளது பொதுமக்களுக்கு பத்தாண்டுகளுக்கு முந்திய காயல்பட்டினத்தை நினைவுபடுத்தியது. சுழற்சிமுறை மின்தடை நேரம் அதிகாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை இருக்கும்போதெல்லாம் இவ்வினிய ஒலியை நகரில் கேட்க இயலும்.
இருப்பினும்,
ஹயாத்தழி....ன்! இந்த நேரம் பார்த்து கரண்ட்டை எடுக்கிறானே.... என்று மின் மோட்டாரை நம்பியே இருப்போரும்,
ஆகா... இந்நேரத்தையே எப்போதும் மின்தடை நேரமாக நிரந்தரப்படுத்தினால், நிம்மதியாக குடிநீரை அடிபைப் மூலம் பெற்றுக்கொள்ளலாமே... என்ற ஏக்கத்தில் அடிபைப் ஆர்வலர்களும் கருதும் நிலையில், இவைபற்றிய எந்தக் கவலையுமில்லாத வேறு சிலர்,
இப்படி அநியாயத்துக்கு நடு ராத்திரியில் (காலை 06.00 முதல் 08.00 மணி வரை) கரண்ட் கட் பண்ணி நம்மள நிம்மதியா தூங்க விடாம பண்ணிட்டானே... என்றும் ஆதங்கப்பட்டுக்கொண்டது ரசிக்கும்படியாக இருந்தது. |