காயல்பட்டினம் தஃவா சென்டரில் உள்ளூர் மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம் வரும் மே மாதம் 02ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
முஸ்லிமல்லாதோருக்கு இஸ்லாமிய மார்க்க செய்திகளை எடுத்துரைக்கவும்,
இஸ்லாமை தன்னார்வத்துடன் தம் வாழ்வியல் நெறியாக்கிக் கொள்ள விரும்புவோருக்கு வழிகாட்டவும், அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்வியை வழங்கவும்,
முஸ்லிம்களை - குறிப்பாக முஸ்லிம் மாணவர்களை முழுமையான நல்லொழுக்கப் பாதையில் வழிநடத்தவும் வேண்டி துவக்கப்பட்டதே நமது காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர்.
ஆண்டுதோறும் நமது தஃவா சென்டர் மூலம், கோடை விடுமுறை காலத்தின்போது, அவர்களது விடுமுறையை பயனுள்ள வழியில் கழித்திடும் பொருட்டு, உள்ளூர் மாணவர்களுக்காக இஸ்லாமிய பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், நடப்பாண்டிற்கான கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 02.05.2011 முதல் 22.05.2011 வரை தினமும் காலை 09.15 மணி முதல் மதியம் 01.15 மணி வரை நடைபெறவுள்ளது.
முகாமின் இந்த வகுப்புகளில் திருமறை குர்ஆனின் சிறிய - பெரிய சூராக்கள் மனனம், ஒழுக்க மாண்புகளை உணர்த்தும் பாடங்கள், பிரார்த்தனை - துஆ மனனம், இஸ்லாமிய கொள்கை விளக்கம், இஸ்லாமிய வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளின் கீழ் குறுகிய கால பாட வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
குறைந்த அளவிலேயே மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதால் முதலில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு,
91500 50553,
91500 50554,
91500 50556,
91500 50557
ஆகிய கைபேசி எண்களில் தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
TVS ஜக்கரிய்யா,
மேலாளர்,
சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்),
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம். |