தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் சீட்டு (பூத் ஸ்லிப்) வீடு வீடாக அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் இதேபோன்ற வாக்காளர் சீட்டுகள் - தேர்தல் அதிகாரியின் கையொப்பமின்றி அரசியல் கட்சிகளால் வழங்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, போலி வாக்காளர் சீட்டு வினியோகிக்கும் அரசியல் கட்சிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் தலைமை அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கடந்த 03.04.2011 முதல் இந்திய தேர்தல் ஆணைத்தால் தயார் செய்யப்பட்ட வாக்காளர் சீட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலகர்கள் மூலம் வீடு வீடாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில அரசியல் கட்சியினர் இதேபோல் தேர்தல் அதிகாரியின் கையொப்பமின்றி உள்ள வாக்காளர் சீட்டுகளை தூத்துக்குடி நகரில் வினியோகம் செய்வது கண்டறியப்பட்டு, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வாக்காளர் வாக்குச் சாவடி எண், வாக்காளர் வரிசை எண் அடங்கிய துண்டுச் சீட்டு மட்டுமே அரசியல் கட்சியினர் வழங்கிட தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்படி அனுமதியைப் புறக்கணித்து, இந்திய தேர்தல் ஆணையம் போன்றே வாக்காளர் சீட்டு வினியோகம் செய்வது விதிமுறைகளுக்கு புறம்பான செயல்களாகும்.
அவ்வாறு வினியோகம் செய்யும் நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். |