தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் சீட்டு (பூத் ஸ்லிப்) வீடு வீடாக அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வாக்காளர் சீட்டு வினியோகிக்கப்படாத வாக்காளர்களுக்கு அவரவர் வாக்குச்சாவடிகளில் இம்மாதம் 10ஆம் தேதியன்று புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் சீட்டு வினியோகிக்கப்படுமென தூத்துக்குடி மாவட்ட தேர்தல் தலைமை அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்பது ஒவ்வொரு வாக்காளரின் உரிமை மற்றும் தலையாயக் கடமை. அதனடிப்படையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை சீரிய முறையில் நிறைவேற்றிட வேண்டும் என்ற நோக்கத்துடன் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு வாக்காளர்களுக்கு அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் 03.04.2011 முதல் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11,00,380. அவற்றில் இதுநாள் வரை 7,59,396 வாக்காளர்களுக்கு (69 சதவிகிதம்) வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் சீட்டு பெறாத 3,40,984 வாக்காளர்களுக்கு 10.04.2011 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடியில் வைத்து புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டினை வழங்கிட அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வைத்து வாக்காளர் சீட்டினை வழங்குவார்கள்.
அன்றைய தினம் வாக்காளர்கள் தமது வாக்காளர் சீட்டினை தவறாமல் பெற்றுக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நூறு சதவிகித வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட தேர்தல் தலைமை அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |