வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை நேரம் 11.04.2011 (நாளை) மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது. பரப்புரை நேரம் முடிவடைந்த பின்னர் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட தலைமை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
11.04.2011 அன்று மாலை 05.00 மணி முதல், 2011 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் விதிமுறைகளுக்கிணங்க அரசியல் கட்சியினர் பரப்புரை முடிவடைகின்றது.
கட்டுப்பாடுகள்:
மேற்படி நேரம் முதல் அரசியல் கட்சியினர் எந்தவிதமான பரப்புரைகளும் மேற்கொள்ளக் கூடாது.
அரசியல் கட்சிகளின் சின்னங்கள் பொறித்த - அல்லது சின்னங்களை, கொடிகளை நினைவூட்டும் அணிகலன்கள் எதையும் வெளிப்படையாக அணிதல் கூடாது.
எந்த விதமான ஊடகங்கள் மூலமும் பரப்புரைகள் மேற்கொள்ளக் கூடாது.
பத்திரிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள், எவ்விதமான ஆவணங்கள் மூலமும் கருத்துக் கணிபபுகள் வெளியிடக் கூடாது.
அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால்தான் தேர்தல் அலுவலகம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடிகளின் 100 மீட்டருக்குள் எவ்வித பரப்புரையும் மேற்கொள்ளக் கூடாது.
100 மீட்டருக்குள் வேட்பாளர்கள் / வேட்பாளர்களின் முகவர்களின் வாகனங்கள் வாக்குச்சாவடி அமைவிடத்தில் பிரவேசிக்கக் கூடாது.
வாக்குச்சாவடிக்கு முக்கிய நபர்கள் / வேட்பாளர்கள் கூட்டமாகச் செல்லக்கூடாது.
தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் / வாக்காளர் தவிர பிற நபர்களுக்கு வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதியில்லை.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் தவிர ஏனையோர் எவரும் கைபேசி பயன்படுத்தக் கூடாது.
வாக்காளர் தமது புகைப்படம் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லையெனில் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.
வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் சீட்டு (பூத் ஸ்லிப்) ஆகியவற்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.
சிறப்பு ஏற்பாடுகள்:
வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க ஓரல் பவுடர் ஆயத்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மருத்துவ உதவியாளர் அவசர சிகிச்சைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் - வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல் பாதுகாப்பும், நுண்பார்வையாளர் மற்றும் ஆன்லைன் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களை மிரட்டுவது, ஆள் மாறாட்டம் செய்வது, தடுப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். 11.04.2011 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் எவரும் தொகுதிக்குள் தங்கியிருக்கக் கூடாது. கல்யாண மண்டபம், சமுதாயக் கூடம் மற்றும் தங்கும் விடுதிகளில் வெளியூர் நபர்களின் இருப்பு குறித்து கண்காணிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் அனைவரும் தவறாது 13.04.2011 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தங்களின் வாக்குகளை அமைதியான முறையில் வாக்களித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நூறு சதவிகித வாக்குப்பதிவுகள் எய்திட சிறந்த ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட தேர்தல் தலைமை அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |