வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு அவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டு (பூத் ஸ்லிப்) வீடு வீடாக வினியோகிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவிலுள்ள ஒரு வாக்காளர் வீட்டில் அவர்களது வாக்காளர் சீட்டை வினியோகிப்பதற்காக அலுவலர் அந்த வீட்டின் கதவைத் தட்டியபோது, ஆர்வத்துடன் திறந்த அங்குள்ள பெண்மணி வாக்காளர் சீட்டை அலுவலர் அவரிடம் கொடுத்து கையெழுத்து கேட்டவுடன்,
“துட்ட எங்கே...? துட்டு தராம நான் எதுலயும் ஒரு கையெழுத்தும் போட மாட்டேன்!” என்று தீர்க்கமாக தெரிவித்தாராம்.
இதனால் அதிர்ந்துபோன அந்த அலுவலர், “இது கட்சிக்காரங்க தர்ற சீட்டு இல்லமா... தேர்தல் ஆணையம் தர்றது...” என்று விளக்க,
“யார் தந்தா எனக்கென்ன...? துட்டு தந்தா வாங்கிட்டு கையெழுத்து போடறேன்... இல்லாட்டி எதுவும் வேணாம்...!” என்று அதிரடியாக சொல்லிவிட்டாராம்.
நொந்துபோய் திரும்பிச் சென்ற அவரை மறுபடி அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற தெருவாசி ஒருவர், அப்பெண்ணிடம் பணிவாக விளக்கம் கூறி வாக்காளர் சீட்டை ஒப்படைத்து கையெழுத்து பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தகவல்:
மஞ்சுளா சாமு,
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம். |