ரியாத், ரௌழா தஃவா நிலையத்தின் அணுசரனையுடன் தமிழ் தஃவா ஒன்றியத்தின் தமிழ் பேசும் குடும்பகளுக்கான மாதாந்திர தஃவா நிகழ்ச்சி ஏப்ரல் 1
வெள்ளிக்கிழமை அன்று ஜூம்ஆத் தொழுகை முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற்றது. ரியாத்தில் சுலை எனுமிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காயலர் உட்பட சுமார் முன்னூறு பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக (இமாம் முஹம்மத் பின் ஸஊத் பல்கலைக்கழக மாணவர்) மௌலவி அஹ்மத் April Fool - பொய்யர்களின் மாதம்
ஏப்ரல் என்ற தலைப்பில் ஜூம்ஆப் பிரசங்கத்தை நிகழ்த்தினார். தொடர்ந்து தமதுரையில் மக்களிடம் அந்நியக் கலாச்சாரங்கள்
ஊடுறுவவதற்கான வழிகள் பற்றியும் அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தினார்.
ஜும்ஆத் தொழுகையை அடுத்து (மன்னர் ஸஊத் பல்கலைக்கழக மாணவர்) மௌலவி அப்துல்லாஹ் நபித் தோழியர் வரிசையில் உம்மு
அம்மாரா நஸீபா பின்த் கஃப் (ரலி) அவர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை விளக்கினார். இஸ்லாத்துக்காக அவர்கள் செய்த சேவைகள்,
நபியவர்களிடமிருந்து கற்ற பாடங்கள், அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கியதாக அவ்வுரை
அமைந்திருந்தது.
பின்னர் ஆண்கள் பகுதி விளையாட்டுத் திடலில் கால்பந்தாட்டமும், பெண்கள் பகுதியில் சிறுமிகளுக்கான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அதனை அடுத்து பகல் உணவுக்காகவும் , அஸர் தொழுகைக்காகவும் இடைவேளை வழங்கப்பட்டது.
தொடர்ந்து ரௌழா தஃவா நிலையத்தின் தஃவாப் பிரிவின் தலைவர் அஷ்ஷைக் தௌபீக் பின் காஸிம் அஷ்ஷஹ்ரான் 'அறிவைத் தேடுவதின்
அவசியம், பிரச்சாரப் பணியின் முக்கியம்' எனும் பொருளில் சிற்றுரை நிகழ்த்த, அதை தஃவா நிலையத்தின் தமிழ் பிரிவின் அழைப்பாளர்
மௌலவி ரம்ஸான் (மதனி) மொழிபெயர்த்தார்.
அதனை அடுத்து 'அல்குர்ஆனை அறிவதன் மற்றும் ஓதுவதின் அவசியமும், அதனை எளிய வடிவில் கற்பதற்கான வழியும்' எனும் தலைப்பில்
கணனித் திரை உதவியுடன் கருத்துக்களை முன்வைத்தார் மௌலவி அபுல் ஹஸன் (மதனி).
தொடர்ந்து இளஞ் சிரார்களுக்கு கனடா நாட்டைச் சேர்ந்த அப்துல்லாஹ் 'சிறுவயதிலிருந்தே கற்க வேண்டிய இறை நம்பிக்கை' எனும் தலைப்பில்
ஓர் சிற்றுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அன்றைய தின விஷேட உரையை நிகழ்த்தினார் மௌலவி ரம்ஸான் (மதனி). அவரது உரை 'இஸ்லாமிய நாடுகளில் ஏற்படும்
கிளர்ச்சிகளின்போது உண்மை முஸ்லிமின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும்?' என்ற அடிப்படையின் கீழ் அமைந்திருந்தது. தலைவர்களுக்குக்
கட்டுப்படுவதின் அவசியம், எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடுவதின் விபரீதம் பற்றியும், ஆட்சியாளர்களிடம் தவறைக் கண்டால் நாம்
மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை என்ன என்பது பற்றியுமுள்ள ஹதீஸ்களுடனேயே அவரது உரை தொடர்ந்தது.
அதனைத் தொடர்ந்து மஃறிப் தொழுகை நடைபெற்றது.
மஃறிப் தொழுகையை அடுத்து Riyadh - King Fahd Medical City யில் வைத்தியராகக் பணி புரியும் Dr.நவாஸ் 'Heart Attack
ஏற்படுவதற்கான காரணிகளும், அதற்கான தற்காப்பு வழிகளும்' எனும் பொருளில் கணனித் திரை உதவியுடன் விளக்கமளித்தார். அவர் தமதுரையில்
'நீரிழிவு, கொலஸ்ட்ரோல், உயரத்துக்குப் பொருத்தமற்ற உடற்பாரம், புகைத்தல் போன்றவை Heart Attack ஏற்படுவதற்கான காரணிகளில் சில'
என்று குறிப்பிட்டதோடு Heart Attack ஏற்பட்டவருக்காக நாம் செய்யவேண்டிய முதலுதவி பற்றியும் விபரித்தார்.
அவரது உரையை அடுத்து போட்டி நிகழ்ச்சிகளிலும், கேள்வி பதில் நிகழ்ச்சிகளிலும் கலந்து வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படடதோடு
நன்றியுரையும் வழங்கப்பட்டது.
இஷாத் தொழுகையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. அடுத்த நிகழ்ச்சி மே 6 அன்று நடைபெறும்.
தகவல்:
ரியாதிலிருந்து,
அபு அஹ்மத் சோனா,
அம்பல மரைக்கார் தெரு.
|