வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட தலைமை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 (43 of 1951)இன் படி, ஜனநாயக தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். மேலும், மேற்படி சட்டம் பிரிவு 135இல் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள பணியார்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேற்படி கடமையை நிறைவேற்றிடும் வகையில் 13.04.2011 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் 13.04.2011 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளித்திட தொழி்ற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் உரிமையாளர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொள்கிறார்.
மேலும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படும் 13.04.2011 (புதன்கிழமை) நாளுக்குரிய ஊதியம் குறைக்கப்படவோ, பிடித்தம் ஏதும் செய்யப்படவோ கூடாது எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொள்கிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |