தமிழக சட்டசபைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 13 அன்று நடைபெற உள்ளது. இறுதிகட்ட பிரசாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் தற்சமயம் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 09.04.2011 அன்று அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.மனோகரன் சார்பில் அவரது சகோதரர் பி.ஆர்.ஹரிஹரன் குழுவினர் காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தினரை ஐ.ஐ.எம். வளாகத்தில் சந்தித்து ஆதரவு கோரினர்.
இந்நிகழ்ச்சிக்கு ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் முன்னிலை வகித்தார்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ வரவேற்றுப் பேச, நகர்நலக் கோரிக்கைகளை பொறியாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் முன்வைத்து, கோரிக்கை மனுவை அதிமுக வேட்பாளர் பி.ஆர்.மனோகரனின் சகோதரர் ஹரிஹரனிடம் சமர்ப்பித்தார்.
பின்னர் உரையாற்றிய ஹரிஹரன், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டதாகவும், தன் சகோதரரும், அதிமுக வேட்பாளருமான பி.ஆர்.மனோகரனிடம் கோரிக்கை மனுவை அளித்து, அவை நிறைவேற்றப்பட ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், முருகேசன், அருண்குமார், வக்கீல் அஷோக், கண்ணன், தீன், யூசுஃப், ம.ம.க. நகர நிர்வாகி ஜாகிர் ஹுஸைன் உட்பட பலர் உடனிருந்தனர். பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
மறுநாள் 10.04.2011 அன்று தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஐ.ஐ.எம். நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தினரை ஐ.ஐ.எம். வளாகத்தில் சந்தித்து ஆதரவு கோரினார்.
ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையிலும், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ வரவேற்றுப் பேச, நகர்நலக் கோரிக்கைகளை பொறியாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் முன்வைத்து, கோரிக்கை மனுவை திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தார்.
பின்னர் உரையாற்றிய அனிதா, முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மேற்கோள் காட்டி விளக்கமளித்துப் பேசினார்.
நகரில், தொழிற்சாலைக் கழிவுகளால் புற்றுநோய் பரவல் அதிகமிருப்பதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இதுவரை இவ்வளவு அழுத்தமாக தன்னிடம் யாரும் தெரிவித்ததில்லை என்று தெரிவித்த அவர், தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்தால், தாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து இக்கோரிக்கை மீது உரிய நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டம் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டதாகவும், தேர்தல் முடிவுற்றதும் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்த அவர், நகரின் மின்சாரத் தேவையை திருப்திகரமாகப் பூர்த்தி செய்திடுவதற்காக துணை மின் நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும், தகுந்த இடம் கிடைக்கப்பெறாததால் அத்திட்டம் தாமதமடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
துணை மின் நிலையம் அமைப்பதற்காக தேவைப்படும் இடத்தில் புறம்போக்கு நிலங்கள் இருப்பதாகவும், அதனைப் பயன்படுத்த ஆவன செய்யுமாறும் அப்போது அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் கட்டப்பட்டு வரும் 169 சுனாமி குடியிருப்பு வீடுகள் திட்டம் குறித்து பேசிய அவர், நியாயமான அனைத்து ஒத்துழைப்புகளையும் தான் தொடர்ந்து அளித்து வருவதாகவும், அது குறித்த விபரங்களை நகர பெரியவர்களிடம் கேட்டறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தி.மு.க. நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் உடனிருந்தனர். பொதுமக்கள் திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஐ.ஐ.எம். சார்பில் இரு கட்சி வேட்பாளர்களிடமும் முன்வைக்கப்பட்ட நகர்நலக் கோரிக்கைகள் பின்வருமாறு:-
ஐயா,
உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டுமாக! வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களின் ஆதரவை நாடி வந்துள்ள உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
முக்கியம் எங்களுடைய ஜமாஅத் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து எங்கள் ஊரின் நலன் கருதி மட்டும் அவசியம் நிறைவேற்றபட வேண்டிய கீழ்க்காணும் அத்தியாவசிய கோரிக்கைகளை முன்னிறுத்தியே நாங்கள் வாக்களிப்பது என்று உறுதியாக தீர்மானித்துள்ளோம்.
அதனடிப்படையில் கீழ்க்காணும் கோரிக்கைகளை நிறைவேற்று முகமாக உறுதியான வாக்குறுதியளித்து, அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாகவும் வைத்து, அவைகளை செவ்வனே நிறைவேற்றும் கட்சிக்குதான் எங்கள் ஆதரவு என்பது எங்களின் நிலைபாடு என்பதால் தாங்களும் இக்கோரிக்கைகளின் அவசியத்தைப் புரிந்து கொண்டு அவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
1. தொழிற்சாலை மீது நடவடிக்கை:
எங்கள் ஊரில், பெரும் உயிர்க்கொல்லி நோயான புற்றநோய் (கேன்சர்) என்னும் கொடிய நோய் பரவி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இக்கொடிய புற்றுநோயினால் மரணமடைந்தோர் பலர். இந்நோய்க்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று அருகிலுள்ள டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் கழிவுகள் என்பது நாடறிந்த உண்மை. எனவே தங்கள் கட்சி ஆட்சிக்கு வரும் வேளையில் மேற்படி தொழிற்சாலையின் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் தொடரும் உயிர்ச்சேதங்களை தடுக்க ஆவன செய்யவேண்டும் என்பதை முதல் கோரிக்கையாக வைக்கிறோம்.
2. சுனாமி குடியிருப்பு தொகுப்பு வீடுகள் கட்டுமானம்:
எங்கள் ஊரில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சுமார் ஆறு கோடி ரூபாய் செலவில் 169 சுனாமி வீடுகளை கட்டியிருகின்றனர். எமதூரைச் சார்ந்த எத்தனையோ ஏழைகள் குடிசை வீடுகளில் வசிக்கும் நிலையில் பிற ஊர்வாசிகளை குடியமர்த்த வீடுகட்டுவது என்பது எங்கள் ஊரின் ஒட்டமொத்த மக்களும் ஜிரணிக்க இயலாத விஷயம். எனவே தாங்கள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மேற்படி குடியிருப்புகளை உடனே தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கைகள் செய்யவேண்டும் என்று மிகவும் வலியுறுத்துகிறோம்.
3. இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டம்:
எங்கள் ஊரின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகவும், ஊருக்கு சுத்தமான குடிநீரை வழங்கவும் கடந்த 30 வருடங்களாக இடண்டாவது பைப் லைனுக்காக போராடி வருகிறோம். வெறும் கோரிக்கை என்ற நிலையிலேயே இருக்கும் இத்திட்டத்தை நிறைவேற்றி எங்கள் ஊரின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்பதையும் உறுதியாக கேட்டுக்கொள்கிறோம்.
4. துணை மின் நிலையம் அமைத்தல்:
எங்கள் ஊரின் மின்சார தேவையை அறிந்து துணை மின் நிலையம் அமைப்பது அவசியத்திலும் மிக அவசியமாக உள்ளது. எனவே உபரியாக உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் மேற்படி துணைமின்நிலையம் அமைத்து எங்கள் ஊரின் மின்சார தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்றும் கோருகிறோம்.
தாங்கள் மேற்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் வருகின்ற சட்டமன்ற தோ;தலில் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
மேற்கண்டவாறு அக்கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 08ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளியின் குத்பா பிரசங்கத்தில், வரும் தேர்தலில் எவ்வாறு வேட்பாளர்களைத் தேர்வு செய்யவேண்டும் என்பது குறித்து பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரை நிகழ்த்தினார்.
உரையின் ஒலிப்பதிவைக் கேட்க இங்கு அழுத்தவும்
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியிலும், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதிலும் பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.
தகவல்:
எம்.என்.அஹ்மத் ஸாஹிப்,
தைக்கா தெரு, காயல்பட்டினம்.
படங்கள்:
எஸ்.அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |