நாளை (ஏப்ரல் 13) தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் 13வது சட்டசபையை தேர்ந்தெடுக்க தேர்தலுக்கு செல்கின்றன. இதற்காக தமிழகம் முழுவதும் 54,000க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவைகள் எவ்வாறு அமைந்திருக்கும் என தமிழக தேர்தல் ஆணையம் மாதிரி வடிவினை வெளியிட்டுள்ளது.
வாக்குச்சாவடியில் நுழையும் வாக்காளர், வேட்பாளர்களின் பிரதிநிதிகளை (Polling Agents) தாண்டி, முதல் தேர்தல் அதிகாரியை (Polling Officer 1) அணுக வேண்டும். முதல் தேர்தல் அதிகாரி, பட்டியலில் வாக்காளர் பெயர் உள்ளதா என்றும், அவரின் அடையாளம் சரிதானா என்றும் சரிபார்ப்பார்.
அதனை தொடர்ந்து வாக்காளர் - அடுத்து அமர்ந்திருக்கும் இரண்டாவது தேர்தல் அதிகாரியை அணுக வேண்டும். இரண்டாவது தேர்தல் அதிகாரி (Polling Officer 2), அழியா மையினை (Indelible Ink) விரலில் தடவுவார். மேலும் வாக்காளர் பெயரினை - தேர்தல் அதிகாரி - 17A படிவில் எழுதி, கையெழுத்து / கைநாட்டு பெறுவார்.
இத்தருணத்தில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தாங்கள் 49 O விதியை பயன்படுத்த விரும்புவதாக தெரிவிக்கலாம். அதனை தேர்தல் அதிகாரி 17A பதிவில் குறித்துக்கொண்டு கையெழுத்து பெற்றுக்கொள்வார்.
மேலும், தவறாக வேறொருவர் அவரின் வாக்கினை அளித்து சென்றிருந்தால், வாக்காளர் Tendered Vote பெற்று, தங்கள் வாக்கினை பதிவு செய்யலாம்.
அதனை அடுத்து, வாக்காளர் மூன்றாவது தேர்தல் அதிகாரியை (Polling Officer 3) அணுகுவார். மூன்றாவது தேர்தல் அதிகாரி, அழியா மை சரியாக இடப்பட்டுள்ளதா என பார்த்துவிட்டு, மின்னணு வாக்கு இயந்தரத்தை இயக்குவார்.
இப்போது வாக்காளர், மறைவாக வைக்கப்பட்டிருக்கும் (Voting Compartment) மின்னணு வாக்கு இயந்திரத்தில் (Electronic Voting Machine, EVM) தனது வாக்கினை பதிவு செய்யலாம்.
அனைத்தையும் கண்காணிக்க மூத்த தேர்தல் அதிகாரியும் (Presiding Officer) அறையில் இருப்பார். சில வாக்குச்சாவடிகளில், நடவடிக்கைகளை கண்காணிக்க, வெப் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும்.
வாக்காளர்கள் - தங்கள் வாக்கினை காலை 8 மணி முதல் மாலை 5 வரை அளிக்கலாம். வாக்களிக்க வரும்போது கட்டாயம் புகைப்படம் கொண்ட வாக்காளர் அட்டை கொண்டு வர வேண்டும்.
வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வாக்காளர் வரிசை நீண்டிருந்தால், 5 மணியையும் தாண்டி வாக்களிக்க அனுமதிக்கொடுக்கும் முகமாக, வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு மாலை 4:55 க்கு Token வழங்கப்படும். |