சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கு கடந்த 26.03.2011 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில், நடப்பு பருவத்திற்கான புதிய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு தெரிவு செய்யப்பட்டது. இப்புதுக்குழுவின் முதல் செயற்குழுக் கூட்டம் 08.04.2011 அன்று 19.45 மணிக்கு மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நடப்பு பருவத்திற்கான முதல் செயற்குழுக் கூட்டம் 08.04.2011 அன்று 19.45 மணிக்கு மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
சாளை நவாஸ் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். டபிள்யு.கே.எம்.முஹம்மத் ஹரீஸ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொண்டமைக்காக உறுப்பினர்களனைவருக்கும் மன்றத் தலைவர் ரஷீத் ஜமான் நன்றி தெரிவித்தார். கடந்த பொதுக்குழுவை சிறப்புற நடத்தியமைக்காக ஏற்பாட்டுக் குழுவினருக்கு கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
மன்றத்தின் முக்கிய செயல்திட்டங்களுள் ஒன்றான அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகரிலுள்ள 39 ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த 30.03.2011 அன்று ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சமையல் பொருளுதவி வழங்கப்பட்டதாக மன்றச் செயலர் மொகுதூம் முஹம்மத் தெரிவித்தார்.
இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான காரணம் மற்றும் நோக்கம் குறித்து மன்றத்தின் வழிகாட்சி ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் உறுப்பினர்களிடம் விளக்கிப் பேசினார்.
சந்தா தொகை 10 டாலராக நிர்ணயம்:
மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சந்தா தொகையாக, உறுப்பினர்களின் நீண்ட விவாதத்திற்குப் பின் 10 சிங்கப்பூர் டாலர் தொகை நிர்ணயிக்கப்பட்டது. விரும்பும் உறுப்பினர்கள் அதிகப்படியான தொகையை சந்தாவாக வழங்கலாம் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
உறுப்பினர் மாதாந்திர சந்தா தொகையை வசூலிக்கும் பொறுப்பு மன்றத்தின் துணைப் பொருளாளர் எஸ்.ஐ.எஸ்.ஷேக் அப்துல் காதிர், துணைச் செயலாளர் ஸூஃபீ ஹுஸைன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மன்றத்திற்கான புதிய வங்கிக் கணக்கு எண் மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர்கள் தமது மாதாந்திர சந்தா தொகைகளை குறித்த காலத்தில் தவறாமல் அனுப்பித் தருமாறும், அனுப்பிய விபரத்தை மன்றச் செயலருக்கு மின்னஞ்சல் அல்லது கைபேசி குறுஞ்செய்தி வாயிலாக உடனுக்குடன் தெரிவிக்குமாறும் மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா கேட்டுக்கொண்டார்.
உதவி கோரும் விண்ணப்பங்கள் பரிசீலனை:
பல்வேறு தேவைகளுக்காக உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் இக்கூட்டத்தில் பார்வையிடப்பட்டது. இதுகுறித்து அடுத்த செயற்குழுக் கூட்டத்திற்குள் இறுதி முடிவு செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃவுக்கு நிதியுதவி மற்றும் வீடு கட்ட பொருளுதவி:
இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக ரூபாய் இருபத்தைந்தாயிரம் வழங்கப்பட்டுள்ளது.
வீடு கட்டுவதற்காக ஒருவருக்கு முப்பதாயிரம் ரூபாய் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இக்ராஃவிற்கான மன்ற ஒருங்கிணைப்பாளர் நியமனம்:
இக்ராஃவிற்கான மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொடர்பாளராக உறுப்பினர் டபிள்யு.கே.எம்.முஹம்மத் ஹரீஸ் நியமனம் செய்யப்பட்டார். இக்ராஃ தொடர்பான அனைத்து தொடர்புகள் மற்றும் 2011-2012 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை நிலுவையை வசூலிக்கும் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மே 07இல் உண்டியல் திறப்பு:
நகர்நலப் பணிகளுக்கான மன்றத்தின் நிதியாதாரத்தை உயர்த்தும் நன்னோக்குடன் செயல்படுத்தப்பட்டு வரும் உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ், நடப்பு பருவத்திற்கான உண்டியல் திறப்பு 07.05.2011 அன்று நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் 06.05.2011 தேதிக்குள் நிரப்பப்பட்ட தமது உண்டியல்களை மன்றத்தில் ஒப்படைக்குமாறும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மன்றச் செயலாளர் உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு, குறித்த நேரத்தில் உண்டியலை ஒப்படைக்கச் செய்வார்.
இலச்சினை குறித்த உறுப்பினர்களின் கருத்து வரவேற்பு:
மன்றத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இலச்சினை உறுப்பினர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த தமது கருத்துக்களை உறுப்பினர்கள் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இரத்த தான முகாம்:
வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ள இரத்த தான முகாமில் மன்ற உறுப்பினர்களைப் பங்கேற்கச் செய்வதென தீர்மானிக்கப்பட்டது. தேதி மற்றும் இடம் குறித்து முடிவு செய்யப்பட்டதும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும், முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள உறுப்பினர்கள் மன்றச் செயலரிடம் தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
மகளிருக்கான பொறுப்புகள்:
வரும் பொதுக்குழுவில் நடத்தப்படவுள்ள வினாடி-வினா போட்டிக்கான கேள்விகளை ஆயத்தம் செய்திடும் பொருட்டு, இஸ்லாமிய தலைப்புகள் பல மகளிரிடம் வழங்கப்பட்டுள்ளது.
மன்ற உறுப்பினர் விபரப்பதிவு:
மன்ற உறுப்பினர்களின் விபரங்களை முறைப்படி பதிவு செய்வதற்கான மென்பொருள் பதிவேடு ஒன்றை உருவாக்கும் பொறுப்பு உறுப்பினர் ஹஸன் மவ்லானா வசம் ஒப்படைக்கப்பட்டது.
வேலை தேடும் காயலர் ஜூலையில் வரவழைப்பு:
வேலை தேடும் பொருட்டு சிங்கப்பூருக்கு வரவழைக்கப்படவுள்ள காயலருக்காக மன்றத்தால் கட்நத டிசம்பர் 2010 முதல் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. அவர் வரும் ஜூலை மாதத்தில் சிங்கை வரவழைக்கப்படவுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வீடு கட்ட உதவுவது குறித்து பரிசீலனை:
நகரில் குடியிருக்க வழியின்றி தவிக்கும் - குறிப்பாக மழை நேரங்களில் கடும் சிரமங்களை அனுபவிக்கும் ஏழை மக்கள் குடியிருப்பதற்காக வீடு கட்ட உதவித்தொகை மன்றத்தால் வழங்கப்பட வேண்டும் என உறுப்பினர் சாளை நவாஸ் கருத்து தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வரும் மாதங்களில் மன்ற செயற்குழு ஆயந்தறிந்து, அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லாத நிலையில், ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |