காயல் அஸ்ஹர் ஜமாஅத் - UAE ஏற்பாடு செய்திருந்த உணர்வாய் உன்னை - இஸ்லாமியப் பார்வையில் ஆளுமைத் திறன் பயிற்சி முகாம் துபாயில் கடந்த 08.04.2011 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் எம்.எஸ். அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல் அஸ்ஹர் ஜமாஅத் - UAE ஏற்பாடு செய்திருந்த உணர்வாய் உன்னை - இஸ்லாமியப் பார்வையில் ஆளுமைத் திறன் பயிற்சி முகாம் துபாயில் கடந்த 08.04.2011 வெள்ளிக்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. சரியாக காலை மணி 8.45க்கு துவங்கிய நிகழ்ச்சி மாலை மணி 6.30க்கு முடிவுற்றது.
முன்னதாக, காலை 8.00 மணிக்கு வருகைப் பதிவு துவங்கியது. அதன் பின் காலைச் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டன. பின்னர் சரியாக மணி 8.45க்கு சகோ. ஹுஸைன் நூர்தீன் அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் சகோ. M.S. அப்துல் ஹமீது அவர்கள் அறிமுகவுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தைக் குறிப்பிட்ட அவர், நிகழ்ச்சியை நடத்திய சகோ. ஜலாலுத்தீன் அவர்களை அறிமுகப்படுத்திப் பேசினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரும் அவரே.
காலை 9.00 மணிக்கு பயிற்சி முகாம் ஆரம்பித்தது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த துபாய், ஷார்ஜா, அபுதாபியில் வாழும் காயல் சகோதரர்கள் குடும்பத்துடன் திரளாக வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். குழந்தைகள் தனியாகப் பராமரிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறு சிறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
முற்றிலும் கலந்துரையாடலாகவும் கலகலப்பாகவும் தொடங்கிய நிகழச்சி, பார்வையாளர்களின் சிரிப்பு வெடிகளுடன் சீராகத் தொடர்ந்து, தன்னையறியாமலேயே தன்னில் இருந்த குறைகளை அறிந்தவராக்கி, நாம் எப்படியெல்லாம் காலத்தைக் கடத்தி விட்டோம் என்ற நிலையை உணரத் தொடங்கியதும் நிகழ்ச்சி கலகலப்பிலிருந்து, கலக்கம் கலந்த கவலையாய் மாறி, இறுதியில் உணர்ச்சி பூர்வமாக முடிவுற்றது.
சகோ. ஜலாலுத்தீன் அவர்கள் பல்வேறு கோணங்களில் நமது ஆளுமைகளைப் பற்றி அலசினார். திருக்குர்ஆன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை எடுத்துரைத்தார். இறுதித் தூதர் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய நடைமுறைகளை அறிவுறுத்தினார். நம்மிடமிருக்கும் பலவீனங்களைப் பட்டியலிட்டார். எதையும் உடன்பாடாகப் (Positive) பார்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதற்காக பல செய்முறைப் பயிற்சிகளை அளித்தார். கலந்துகொண்டவர்களுக்கு பல படிவங்கள் கொடுக்கப்பட்டன.
மதிய உணவும், இடையில் புத்துணர்ச்சி பெறுவதற்காக தேநீரும், மாலையில் சிற்றுண்டியும் வழங்கப்பட்டன. காயல் அஸ்ஹர் ஜமாஅத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் (Volunteers) சுழன்று சுழன்று அயராமல் பணியாற்றினர். அவர்களின் கடுமையான உழைப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தது.
இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் தங்களுக்குள் பல மாற்றங்களைப் பெற்றதாக கலந்துகொண்டவர்கள் கூறினர். அனைவரும் தாங்கள் பெற்ற மாற்றங்கள் குறித்து கருத்துப் படிவங்களில் (Feedback Forms) தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
இறுதியாக, காயல் அஸ்ஹர் ஜமாஅத் - UAE-ன் செயலாளர் சகோ. அஹமத் முஸ்தஃபா அவர்கள் நன்றியுரை நவில, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காயல் அஸ்ஹர் ஜமாஅத் - UAE செயற்குழு உறுப்பினர்கள் வெகு விமரிசையாகச் செய்திருந்தனர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எம்.எஸ்.அப்துல் ஹமீது,
செய்தி தொடர்பாளர்,
காயல் அஸ்ஹர் ஜமாஅத் - UAE.
|