சமச்சீர் கல்வி திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், இதுவரை பத்தாம் வகுப்பு மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த செய்முறைத் தேர்வு, இந்த ஆண்டு முதல் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் நடைபெற உள்ளது. தமிழகத்தில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை ஸ்டேட் போர்டு (மாநில பாடத்திட்டம்), மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வி திட்டங்கள் அமலில் இருந்து வந்தன. சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், நான்கு வகையான பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
எனினும், சமச்சீர் கல்வி விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்றதால், இந்த ஆண்டு நடைமுறைக்கு வருமா, வராதா என்ற குழப்பம் நிலவியது. நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பத்து நாட்களுக்குள் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது. சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என, முதல்வர் ஜெயலலிதாவும் நேற்று சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து, நேற்று மாலை பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
சமச்சீர் கல்வியில் நிலவிவந்த குழப்பம் தீர்ந்ததை அடுத்து, பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டே செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதுவரை, பத்தாம் வகுப்பில் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் மாணவர்களுக்கு மட்டுமே செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. ஸ்டேட் போர்டு திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு கிடையாது.
தற்போது, சமச்சீர் கல்வி அமலுக்கு வந்ததன் காரணமாக, அனைத்து மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. இது தொடர்பாக, முந்தைய அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, எழுத்துத் தேர்வுக்கு 70 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வுக்கு 30 மதிப்பெண்களும் பிரிக்கப்பட்டுள்ளன. செய்முறைத் தேர்வுகளுக்கு உட்பட்ட பாடப் பகுதிகள் குறித்தும், இதை அமல்படுத்துவது குறித்த முறையான அறிவிப்புகளும் விரைவில் தேர்வுத்துறை வெளியிட உள்ளது.
நன்றி:
தினமலர் (10.08.2011) |