இன்று முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் கைது குறித்து தினமணி நாளிதழ் சில காரணங்களை தெரிவித்துள்ளது. அவை வருமாறு:-
கடந்த மார்ச் 1ஆம் தேதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் போது நடந்த கொலை முயற்சி ஒன்றில் சசிகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில்தான் அதில் ஈடுபட்டதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் சசிகுமார் கொல்லப்பட்டார்.
அவரது கொலைக்கு பெரியசாமியின் ஆதரவாளரான சுரேஷ் கோஷ்டியினர்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் அவர் மீது போலீஸார் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்திருந்தனர். இந்நிலையில் சுரேஷை கொலை செய்யத் தூண்டியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் கூறப்பட்டது.
மார்ச் 1ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாகவும், சுரேஷ் கொடுத்த புகார் தொடர்பாகவும் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருச்செந்தூரில் இருந்த அவரை தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போலீசார், அவர் மீது ஐபிசி 307 வது பிரிவின் கீழ் கைது செய்தனர். அனிதாராதாகிருஷ்ணன் கைது செய்தி, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு தினமணி நாளிதழ் தெரிவித்துள்ளது. |