"புனித பயணமான, "ஹஜ்' பயணிகளுக்கான ஒதுக்கீடு கோரிய மனுவை, மத்திய வெளியுறவு அமைச்சகம் தகுதி அடிப்படையில், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அல்-முனவ்வரா ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் தாக்கல் செய்த மனுவில், "மத்திய அரசுக்கு, ஜனவரி மாதம், மனு அனுப்பியுள்ளோம். சவுதி அரேபியா அரசிடம் இருந்து கூடுதல் ஒதுக்கீடு பெற்றோ அல்லது, 50க்கும் அதிகமாக ஒதுக்கீடு பெற்றுள்ள, பழைய தனியார் டூர் ஆப்ரேட்டர்களிடம் இருந்தோ, எங்களுக்கு ஒதுக்கீடு தரக் கோரியுள்ளோம். இம்மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார்.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமாவளவன், "தகுந்த உத்தரவை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பிறப்பிக்குமாறு, வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள ஹஜ் இயக்குனருக்கு உத்தரவிட்டு, மனுவை பைசல் செய்ய வேண்டும்' என்றார். மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், "ஜனவரி 01ஆம் தேதி மனுதாரர் அனுப்பிய மனுவை, தகுதி அடிப்படையில், சட்டப்படி நான்கு வாரங்களில், வெளியுறவு அமைச்சகத்தின் ஹஜ் இயக்குனர், தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
நன்றி:
தினமலர் (10.08.2011) |