பணியாளர் பற்றாக்குறை காரணமாக, காயல்பட்டினம் நகராட்சி திணறி வருவதாக ‘தினமலர்‘ செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி பின்வருமாறு:-
பணியாளர்கள் பற்றாக்குறையால் காயல்பட்டணம் நகராட்சி திணறிவரும் நிலையில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் பணியாளர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் சிறப்புபெற்ற ஆன்மிக நகரத்திற்கு அருகில் கடற்கரையோரம் அமைந்துள்ள காயல்பட்டணத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். காயல்பட்டணத்தில் முஸ்லீம் மக்கள் அதிகமான அளவில் இருந்தபோதும் அனைத்து மத மக்களும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக சகோதரர்களாக இன்றும் அன்புடன் வாழ்ந்து வருவது பெரும் சிறப்பாகும்.
காயல்பட்டணமானது 2ஆம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. காயல்பட்டணம் நகராட்சியில் போதுமான அளவில் பணியாளர்கள் இல்லை. சுகாதாரப்பணி, குடிநீர் விநியோகப் பணி மற்றும் அலுவலகப் பணி உட்பட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொள்வதற்கு தேவையான அளவில் பணியாளர்கள் இல்லை.
பணியாளர்களின் பற்றாக்குறையால் சுகாதாரப்பணி, குடிநீர் பணிகளை முறையாக மேற்கொள்வதில் அவ்வப்போது சிக்கல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே காயல்பட்டணம் நகராட்சி குடிதண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வர, குடிநீர் விநியோகப் பணியில் போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் கிடைக்கிற குடிதண்ணீரையும் பொதுமக்களுக்கு சரியான அளவில் முறையாக விநியோகம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடிதண்ணீர் தட்டுப்பாட்டால் காயல்பட்டணம் நகர பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
நகராட்சியில் நிலவிவரும் பணியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்திட நகராட்சி சார்பில் ஆண்கள் சுயஉதவிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் தற்காலிக பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். தற்காலிக பணியாளர்கள் தண்ணீர் திறப்பு டிரைவர் பணி, சுகாதாரப்பணி, கம்ப்யூட்டர் பணி போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் 11 பேர் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வரும் நிலையில் இவர்கள் மூலமாக நகராட்சி பணிகள் ஓரளவிற்கு தடையில்லாத வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருந்தபோதும் பணியாளர்கள் பற்றாக்குறையால் மக்கள் பணிகளில் தடை தாமதங்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. தற்காலிக பணியாளர்கள் சுயஉதவிக்குழு உறுப்பினர்களாக உள்ள நிலையில் ஒவ்வொருவரும் 30 ஆயிரம் ரூபாய் உள்ள நிலையில் டெப்பாசிட்கட்டியுள்ளனர். தற்காலிக பணியாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தவிர பேட்டா எதுவும் வழங்கப்படாத காரணத்தினால் இரவு பகலாக வேலை பார்த்து வரும் தற்காலிக பணியாளர்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் தற்காலிக பணியாளர்களுக்கு சம்பள உயர்வு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. குறைந்த அளவு சம்பளம் மற்றும் பலமணிநேர கூடுதல் பணிக்கு பேட்டா எதுவும் வழங்கப்படாததால் அவதிக்குள்ளாகிவரும் தற்காலிக பணியாளர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்து சம்பள உயர்வு வழங்கிடவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களை பணிநிரந்தரம் செய்வதற்கு காயல்பட்டணம் 2ஆம் நிலை நகராட்சியும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நன்றி:
தினமலர் (11.08.2011) |