தூத்துக்குடியில் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இரண்டு வீடுகளில் போலீஸôர் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். அப்போது உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் 100 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக உறுப்பினருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். ஆறுமுகனேரி நகர திமுக செயலரான கா.மு. சுரேஷை கொலை செய்யத் தூண்டியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இரவு 11 மணியளவில் திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் பிரீதா வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாள் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸார் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து இரவோடு இரவாக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, வியாழக்கிழமை காலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
2 வீடுகளில் சோதனை: இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான 2 வீடுகளில் போலீஸôர் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி கந்தன் காலனியில் உள்ள அவரது வீட்டில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் வீமராஜ் ஆகியோர் தலைமையிலான போலீஸôர் பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரை சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது வீட்டில் இருந்து துப்பாக்கி ஒன்றையும், 100 தோட்டாக்களையும் போலீஸhர் பறிமுதல் செய்தனர். இந்தத் துப்பாக்கிக்கு முறையாக உரிமம் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் 50 தோட்டாக்கள் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி உண்டாம். ஆனால், அனிதா ராதாகிருஷ்ணன் கூடுதலாக 50 தோட்டாக்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனையின்போது மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலர் முத்தையா, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் தம்பி சுதானந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மற்றொரு வீட்டில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோசப் ஜட்சன் தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தச் சோதனையில் குறிப்பிடும்படியாக எதுவும் கிடைக்கவில்லை என போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சோதனையின்போதும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயவேல் உடனிருந்தார்.
தண்டுபத்தில் போலீஸ் குவிப்பு: அனிதா ஆர். ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து கிராமத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்துவதற்காக போலீஸhர் சென்றனர்.
திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஞானசேகர் தலைமையிலான போலீஸார் பிற்பகல் 3 மணியளவில் அங்கு சென்றனர். ஆனால், அனிதா ராதாகிருஷ்ணனின் வீடு, அருகேயுள்ள பால்பண்ணை, கணினி மையம் ஆகியவை பூட்டிக் கிடந்தன.
பூட்டை உடைத்து சோதனை நடத்துவது குறித்து உயர் அதிகாரிகளின் அனுமதிக்காக போலீஸôர் மாலை 6 மணி வரை அங்கேயே முகாமிட்டிருந்தனர்.
நன்றி:
தினமணி (12.08.2011) |