ஆந்திர மாநிலத்தில் உள்ளதைப் போல மெட்ரிக் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பிரிவுகளைத் தொடங்க தமிழகத்திலும் அனுமதி தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
சி.பி.எஸ்.இ. முறைக்கு மாற விரும்புகிற பள்ளிகள் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை அடுத்த ஆண்டுக்குள் செய்ய உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார், மாநிலத் தலைவர் டி.ஞானமணி உள்ளிட்டோர் சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இந்த ஆண்டே தனியார் பள்ளிகளில் அமல்படுத்துவோம்.
நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 63 தனியார் பதிப்பாளர்களிடம் இருந்து 1 முதல் 9 வகுப்பு வரை சமச்சீர் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வியோடு கூடுதலாக கம்ப்யூட்டர், பொது அறிவு, ஸ்மார்ட் கிளாஸ், யோகா, பரதநாட்டியம், ஆங்கில மொழிப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். அனைத்துப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. போன்ற சர்வதேசப் பள்ளிகள் தரத்துக்கு உயர்த்துவது என முடிவு செய்திருக்கிறோம்.
ஆந்திர மாநிலத்தில் உள்ளது போல, மெட்ரிக் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவுகளை இணையாகத் தொடங்குவதற்கான அனுமதி வழங்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விட்டுத்தர மாட்டோம்: சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதையடுத்து, மெட்ரிகுலேஷன் என்ற பெயரை எந்தக் காரணம் கொண்டும் மாற்றக்கூடாது. அவ்வாறு மாற்றினால், அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்.
தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க முத்தரப்பு குழு அமைத்து பேச்சு நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் பள்ளிகளுக்கும் புதிதாக கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும்.
05ஆம் வகுப்பு வரை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம், 08ஆம் வகுப்பு வரை குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம், 10ஆம் வகுப்பு வரை குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம், பிளஸ் 2 வரை குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் என கட்டணம் நிர்ணயம் செய்துதர வேண்டும். அவ்வாறு நிர்ணயம் செய்தால் பள்ளிகளை நஷ்டம் இல்லாமல் நடத்த முடியும். தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவச சைக்கிள், இலவச லேப்-டாப் வழங்க வேண்டும்... என அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி:
தினமணி (12.08.2011) |