தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்களை அனுப்பும் பணியில் கல்வி அதிகாரிகள் சுறுசுறுப்பு காட்டி வருகின்றனர். வரும் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டு விடும்.
தமிழகத்தில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு விட்டதால் அந்த வகுப்புகளுக்கு ஏற்கனவே சமச்சீர் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டன. மீதியுள்ள வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழக அரசு கல்வித்துறை சமச்சீர் கல்வி புத்தகங்களை பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி பரிமளா நேரடி மேற்பார்வையில் மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்செல்வி, பள்ளித்துணை ஆய்வர் சங்கரய்யா மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் மூலம் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகத்தை அனுப்பும் பணி நேற்று முன்தினம் மாலை முதல் நடந்து வருகிறது.
நேற்றும் காலையில் இருந்து தொடர்ந்து புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடந்து வந்தது. மொத்தம் தூத்துக்குடி கல்வி மாவட்டத்திற்கு 07 முதல் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 3 லட்சத்து 29 ஆயிரத்து 130 சமச்சீர் கல்வி புத்தகங்கள் தேவை. இதில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 760 சமச்சீர் கல்வி புத்தகங்கள் வந்துள்ளது. வெள்ளிக்கிழமை பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடப்புத்தங்களை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபோக இன்னும் தேவையுள்ள புத்தகம் அரசிடம் இருந்து வந்தவுடன் மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படும். 08 முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்விக்குரிய சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் இன்னும் வரவில்லை என்று கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பிற்குரிய தமிழ்வழி கல்விக்குரிய பாடப்புத்தங்களில் சமூக அறிவியல் தவிர பிற பாடப்புத்தங்கள் அனைத்தும் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நன்றி:
தினமலர் (11.08.2011) |