சமச்சீர் பாடப்புத்தகங்களில் இருந்து சர்ச்சைக்குரிய 41 பகுதிகளை நீக்கும் பணிகள் வெள்ளிக்கிழமையிலிருந்து முழுவீச்சில் தொடங்க உள்ளன. மாநிலம் முழுவதும் 2 லட்சம் ஆசிரியர்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
2 கோடிக்கும் அதிகமான புத்தகங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான பள்ளிகளுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் வியாழக்கிழமை அனுப்பப்பட்டுவிட்டன. சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணி அந்தந்தப் பள்ளிகளில் நடைபெறுகிறது. 4 நாள்களுக்குள் அப்பணிகள் முடிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளிலும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது.
1, 6 வகுப்புகளுக்கான சமச்சீர் புத்தகங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கே கோடிக்கணக்கில் செலவானதாகவும், இந்த முறை 8 வகுப்புகளுக்குமான புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டி உள்ளதால் பல கோடி ரூபாய் செலவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு ஸ்டிக்கருக்கு ரூ.1.80 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கருப்பு மை போன்றவற்றை தலைமையாசிரியர்களே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குவது, புத்தக விநியோகம் ஆகிய பணிகளை மேற்பார்வையிட பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அந்தஸ்தில் உள்ள 25 அதிகாரிகள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அந்தந்த மாவட்டங்களிலேயே 16ஆம் தேதி வரை தங்கியிருந்து, அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் கிடைத்ததை உறுதிசெய்த பிறகே அவர்கள் சென்னை திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைமையாசிரியர்களை அழைத்து சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குவது தொடர்பாக வியாழக்கிழமை விளக்கம் அளித்தனர். இந்தப் பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது:
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் முழுவீச்சில் நடைபெறும். ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு இடம் வீதம் மொத்தம் 65 கல்வி மாவட்டங்களில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. வேன், ஆட்டோ, லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பள்ளிகளுக்குப் புத்தகங்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.
வெள்ளிக்கிழமை மாலைக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் புத்தகங்களை வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளில் எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது...
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நீக்கப்படும் பெரும்பாலான பகுதிகள் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் புத்தகங்களில் உள்ளன. இப்பணிக்காக சனி, ஞாயிறு, திங்கள்கிழமை ஆகிய விடுமுறை தினங்களிலும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவர்.
ஸ்டிக்கர் வரவில்லை: தமிழ்ப் புத்தகங்களில் செம்மொழி வாழ்த்து, செம்மொழி மாநாட்டுப் படங்கள் உள்ளிட்டவற்றை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு வியாழக்கிழமை இரவு வரை இந்த ஸ்டிக்கர்கள் அனுப்பப்படவில்லை என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, செம்மொழி வாழ்த்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த குறிப்புகள், சென்னை சங்கமம், புதிய தலைமைச் செயலகக் கட்டடம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், தி.மு.க. குறித்த குறிப்புகள் போன்ற பகுதிகளை சமச்சீர் பாடப்புத்தகங்களில் இருந்து கருப்பு மையிட்டும், ஸ்டிக்கர் ஒட்டியும், கிழித்தும் நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி:
தினமணி (12.08.2011) |