செய்தி எண் (ID #) 6931 | | |
வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011 |
முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அதிகரிக்க வேண்டும்: சட்டசபையில் ஜவாஹிருல்லா கோரிக்கை! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3793 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய |
|
2011-12க்கான திருத்திய நிதி நிலை அறிக்கை, இம்மாதம் (ஆகஸ்ட்) 4 ஆம் தேதியன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து நடந்த விவாதத்தில் நேற்று பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அளவை குறைந்தது 5 விழுக்காடாகவோ அல்லது அதற்கு மேலோ உயர்த்துவதற்கு உடனடியாக ஆவணச் செய்ய வேண்டுமென கோரினார்.
வக்ப் வாரியம் குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் பேராசிரியர் பேசியவைகளின் சாராம்சம் வருமாறு:-
வக்ப் வாரியத்திற்கு மானியம்
உலமாக்களுக்கு முதன் முதலாக ஓய்வுதியம் அளிக்கப்பட வேண்டும் என்ற திட்டம் டாக்டர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் என்பதை நான் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். இது போல் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைமையகம் தற்போது அமைந்துள்ள சென்னை ஜாபர் சாரங் தெருவில் உள்ள இடத்தை வாங்கியதும் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான். அதே போல் அந்த இடத்தில் வக்ப் வாரியத்திற்கு சிறந்த வசதிகளுடன் கட்டடம் கட்டுவதற்காக 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதும் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் தற்போதைய முதல்வர் தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில் தான்.
இதைப் பற்றி மறைந்த இந்திய தேசிய லீக் கட்சித் தலைவரும் முன்னாள் வக்பு வாரியத் தலைவருமான அப்துல் லத்தீப் ஒரு முறை குறிப்பிடும் போது திமுக ஆட்சியாளர்களிடம் நான் பல முறை முறையிட்டும் வக்ப் வாரியத்திற்கு கட்டடம் கட்டுவதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் ஒரு முறை முறையிட்டதும் அதிமுக முதலமைச்சர் பணத்தை ஒதுக்கி கட்டடமும் கட்டி கொடுத்து விட்டார் என்று பெரிதும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
கடந்த திமுக ஆட்சியாளர்களின் பாரமுகத்தின் காரணமாக கடும் நிதி பற்றாக்குறையால் தட்டு தடுமாறி செயல்படும் நிலை வக்பு வாரியத்திற்கு ஏற்பட்டது. இதன் விளைவாக மாண்புமிகு நிதி அமைச்சர் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டது போல் வாரியம் தனது ஒய்வுதியதாரர்களுக்கு ஓய்வுதிய நிலுவைத் தொகை மற்றும் இதர பயன்களை அளிப்பதற்கு இயலாத நிலையில் உள்ளது. இந்த அவல நிலையை போக்க தமிழ்நாடு வக்பு வாரியத்தின் வரலாற்றில் முதன் முறையாக இந்த அரசு ஒரு முறை மானியமாக மூன்று கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்னது நிச்சயமாக வரலாற்றுச் சிறப்புமிக்கது தான்.
இது மட்டுமின்றி சென்ற திமுக ஆட்சியை போல் கருமியாக இல்லாமல் ஆண்டு தோறும் நிர்வாக மானியமாக வழங்கப்பட்டு வரும் 45 இலட்ச ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்ற மாண்புமிகு முதல்வரின் உத்தரவையும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன். வக்ப் வாரியத்தை சீரமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை மனமாற வரவேற்கிறேன். கருணையுள்ளம் நிறைந்த மாண்புமிகு முதல்வர் அவர்கள் பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான மராமத்து பணிகளுக்கு அரசு தற்போது வழங்கி வரும் மாணியமான 60 லட்சத்தை உயர்த்த வேண்டும் என்றும் சிறிய மராமத்து பணிகள் மற்றும் பள்ளிவாசல், அடக்கத்தலங்களுக்கான சுற்று சுவர் எழுப்புவதற்கு அரசு தற்போது அளித்து வரும் மாணியமான ரூ10 லட்சத்தையும் உயர்த்தித் தர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு
அரசு பணிகளில் மதவழி சிறுபான்மை மக்களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு அளி்க்க வேண்டும் இதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான ஆணையம் கடந்த மே 21. 2007ல் பரிந்துரையை அளித்தப் போதினும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சிறுபான்மை மக்களை வஞ்சித்து வருகின்றது.
ஆனால் நமது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீடு அளவை கடைபிடிக்க வழிவகைச் செய்து சமூக நீதியை காத்த மாபெரும் வீராங்கனையாக நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விளங்குகிறார். சமூக நீதியை காத்து வாழ்வின் விளிம்பில் உள்ள மக்களை உயர்த்துவதற்கு ஆட்சியில் உள்ளவர்களுக்கு நமது முதலைமைச்சருக்கு இருப்பது போல் மனவலிமையும் துணிச்சலும் தேவை.
இந்த மனவலிமையும் துணிச்சலும் டெல்லியை ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்,திமுக உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இல்லை ஆனால் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுக்கு அந்த மனவலிமை நிரம்பவே உண்டு. சமூக நீதயை நிலைநாட்டுவதிலும் சிறுபான்மை நலனில் அளப்பரிய அக்கறையுள்ள தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்களித்தது போல் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அளவை குறைந்தது 5 விழுக்காடாகவோ அல்லது அதற்கு மேலோ உயர்த்துவதற்கு உடனடியாக ஆவணச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதே போல் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை கண்காணிக்க அரசு அலுவலர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் இடம் பெறும் அமைக்கப்பட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வின் முழு உரை காண இங்கு அழுத்தவும்.
தகவல்:
பி.எம்.எஸ். சதக்கத்துல்லாஹ்,
தம்மாம், சவுதி அரேபியா.
|