சிங்கப்பூரில் 19.08.2012 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அங்கு நடைபெற்ற காயலர் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்து, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூரில், கடந்த ரமழான் மாதம் முழுவதும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நிறுவனரும் - ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் தராவீஹ் - சிறப்புத் தொழுகை தினமும் இரவு 09.00 மணிக்கு நடத்தப்பட்டது. இத்தொழுகையை, காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.ஹஸன் ஹாஜி வழிநடத்தினார். அவருடன் இணைந்து, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உறுப்பினர்களான ஹாஃபிழ் செய்யித் அஹ்மத், ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஸூஃபீ, ஹாஃபிழ் எம்.ஆர்.ஸூஃபீ, ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப், பாளையம் எம்.எச்.முஹம்மத் அப்துல் காதிர், எஸ்.ஏ.ஆர்.செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோரும் தராவீஹ் தொழுகையின் சில பகுதிகளை வழிநடத்தினர்.
இச்சிறப்புத் தொழுகை ஏற்பாடு காரணமாக, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்களுக்கு அவர்களின் திருமறை குர்ஆன் மனனத்தை மீள்பார்வை செய்து வலுப்படுத்திட நல்ல வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ரமழான் மாதத்தில் ஒரு வாரம், காயல்பட்டினம் ’முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ மார்க்க சொற்பொழிவாற்றினார்.
11.08.2012 சனிக்கிழமையன்று - ரமழான் 23ஆம் நாளில் கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை அதே இடத்தில் நடைபெற்றது. இரவு 11.00 மணிக்குத் துவங்கிய இந்நிகழ்வில், கியாமுல் லைல் தொழுகை, துஆ - பிரார்த்தனை, இதர வணக்க வழிபாடுகள் என ஸஹர் வரை நீடித்தது. சிங்கப்பூர் பெங்கூலன் பள்ளியின் இமாம் மவ்லவீ அப்துல் கய்யூம் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார். நிறைவில், அனைவருக்கும் அங்கேயே ஸஹர் உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
சிங்கப்பூரில், 19.08.2012 அன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அன்று காலையில், அந்நாட்டில் பல்கிப் பரவி வாழும் காயலர்கள் அங்குள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் தம் நண்பர் குழுவினருடன் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
சிங்கப்பூர் காயல் நல மன்ற தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் நிர்வாகப் பொறுப்பு வகிக்கும் அந்நாட்டின் பழமை வாய்ந்த பள்ளியான மஸ்ஜித் ஜாமிஆ சூலியாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ துணை இமாமாகப் பணியாற்றி வருகிறார். அப்பள்ளியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னர், காயலர்கள் அவருடன் இணைந்து தமது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்ட காட்சிகள் பின்வருமாறு:-
பெருநாள் தொழுகை நிறைவுற்ற பின்னர், சிங்கை காயல் நல மன்றத்தின் நிறுவன தலைவரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் அ.வஹீதா, அவரது கணவர் சின்னத்தம்பி, நகரின் சிறந்த கல்விச் சேவகரான - மறைந்த ஹாஜி கே.எம்.இஸ்மத் அவர்களின் மகன் ஷாஜஹான் (கொழும்பு) ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தம் மனைவி - மக்களுடன் கலந்துகொண்ட மன்ற உறுப்பினர்கள், நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கும் உற்சாகத்தில் கட்டித் தழுவி - கைலாகு செய்து - ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
பின்னர், அனைவருக்கும் பஃபே முறையில் பெருநாள் உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. கிடா (அஹனி) இறைச்சி, பொறித்த கோழி, நெய் சோறு, குஸ்கா, இறால் - கனவா மீன் வகைகள், காயல்பட்டினம் பாரம்பரிய கத்திரிக்காய் - மாங்காய், ஃப்ரைட் ரைஸ், காய்கறிக் கூழ், பழக்கூழ், என பல்வேறு உணவுப் பதார்த்தங்களுடன் பெருநாள் உணவு அமர்க்களப்பட்டது. உணவைத் தொடர்ந்து அனைவருக்கும் தேனீர் மற்றும் குளிர்பானம் வழங்கியுபசரிக்கப்பட்டது.
அழைப்பையேற்று வருகை தந்த அனைவருக்கும், ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் நன்றி தெரிவிக்க, துஆவுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் நடத்தப்பட்ட ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
படங்களில் உதவி:
சாளை நவாஸ் |