ஹாங்காங் நாட்டில், 19.08.2012 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், நோன்புப் பெருநாள் காயலர் ஒன்றுகூடல் 19.08.2012 அன்று, மழலையர் பல்சுவை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரவை நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
அன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு மற்றும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
இறையருளால் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் நோன்புப் பெருநாள் காயலர் ஒன்றுகூடல் 19.08.2012 நோன்புப் பெருநாளன்று இரவு 07.30 மணிக்கு, ஹாங்காங் Middle Road Park இல் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஹாஜி S.M. உஜைர் தலைமை தாங்கினார். பேரவை செயற்குழு உறுப்பினர் ஜனாப் எம்.செய்யித் அஹ்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
M.A.K. ருக்னுதீன் சாஹிப் ஆலிம் அவர்களின் மகன் R.S. அஹ்மத் முஹிய்யதீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
பேரவையின் முன்னாள் பொருளாளர் ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றார்.
முத்துச்சுடர் இஸ்லாமிய மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, மஹ்ழரா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஹாஜா முஹிய்யதீன் பாகவி மற்றும் ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஹாஜி S.M. உஜைர் அவர்கள் தனதுரையில் பேரவையின் செயல்பாடு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்கள்.
மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ அவர்கள் ஒற்றுமையின் அவசியத்தை பற்றி பேசினார்கள்.
ஜமால் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் அவர்கள் ஹாங்காங்கில் சீன மொழியின் அவசியத்தை பற்றியும் அதை நம் சிறார்கள் கற்று கொள்ள வேண்டும் என்று தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் வலியுறித்தினார்.
பின்னர், ஹாங்காங் வாழ் காயலர்களின் மழலைச் செல்வங்கள் பங்கேற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் தமது இனிய மழலை மொழியில் அருள்மறை திருக்குர்ஆனின் சிற்சிறு அத்தியாயங்களை அழகுற ஓதினர், சங்கைமிகு சலவாத் ஓதினர், இஸ்லாமிய பைத்துகள் பாடினர் மற்றும் சீன பாடல்கள் பாடினர்.
விடுமுறையில் காயல் சென்றுள்ள பேரவையின் தலைவர், முன்னாள் தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் வாழ்த்து செய்திகள் நிகழ்ச்சியினிடையே வாசிக்கப்பட்டது.
நிறைவாக நன்றியுரைக்குப் பின், மஹ்ழரா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஹாஜா முஹிய்யதீன் பாகவி துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில் ஹாங்காங், மகாவ், சீனா மற்றும் வியட்நாம் வாழ் காயலர்கள் தம் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 120 பேர் இந்த ஒன்றுகூடலில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளினிடையே அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.J.முஹம்மத் பாக்கர்
செயலாளர்
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் |