செய்தி எண் (ID #) 9028 | | |
திங்கள், ஆகஸ்ட் 27, 2012 |
குடிநீர் தட்டுப்பாடு குறித்து காயல்பட்டணம் நகராட்சியின் விளக்கம்! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 4575 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (28) <> கருத்து பதிவு செய்ய |
|
நகரில் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து நகராட்சி சார்பாக - துண்டு பிரசூரம் மூலம் - அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காயல்பட்டினம் நகராட்சிக்கு வரும் குடிநீரானது நமதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேல ஆத்தூரில் இருந்து வருகிறது. அங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரிக்கும் குடிநீர் திட்டம் மூலம் தினமும் 20 லட்ச லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. மேல ஆத்தூரில் உள்ள இந்த நீர்தேக்கத்திற்கான தண்ணீர், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாமிரவருணீ நீர் தேக்கத்தில் இருந்து வரும். மேலும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நீர்தேக்கத்திற்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
தென் மேற்கு பருவ மழை பெய்யாத காரணத்தால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்து அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிற்கு அனுப்பப்படும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டு, அதன் காரணமாக ஸ்ரீவைகுண்டத்திற்கு அனுப்பப்படும் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து மேல ஆத்தூருக்கு அனுப்பப்படும் தண்ணீரும், கடந்த சில நாட்களாக முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டதன் காரணாமாக மேல ஆத்தூரில் இருக்கும் முக்கிய நீர்தேக்கத்தில் உள்ள தண்ணீர் முற்றிலும் காலியானதால், அங்குள்ள கோடைக்கால சேமிப்பு நீர் தேக்கத்தில் இருந்து தான் தற்போது குடிநீர் காயல்பட்டினத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் அளவும் 20 லட்சம் பிறகு 15 லட்சம் தற்போது 11 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் கிடைத்தவுடனேயே நகராட்சி அவசரகால நடவடிக்கைகள் மேற்கொண்டு, லாரி மூலம் நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தது. மேலும் இந்த பிரச்சனை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என அறியப்பட்டவுடன், அரசு அதிகாரிகளின் அறிவுரைப்படி நிலத்தடி நீரினை லாரிகள் மூலமும் நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த குடிநீர் பிரச்சனை மாவட்ட அளவில் அனைத்து பகுதிகளிலும் நிலவும் காரணத்தால் இது குறித்த ஆலோசனைகள் மாவட்ட ஆட்சியகத்தில் இருந்தும் பெறப்பட்டு அதன்படி நகராட்சி செயல்பட்டும் வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க மாவட்ட ஆட்சியிகம் நிதிஉதவி செய்திட முன்வந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது நகரில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்தாரரும் தேர்வு செய்யப்பட்டு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் நகரில் உடனடியாக துவங்கப்பட்டுள்ளது.
மேலும் நீண்டகால நிவாரணம் அடிப்படையில் தண்ணீர் சீராக அனைவருக்கும் கிடைத்திட நகரில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை நிறுத்திட நகர் முழுவதும் ஆட்டோ பிரச்சாரம் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டது. மேலும் இது குறித்த மேல் நடவடிக்கைகள் எடுக்க, நகர மக்கள் ஆயிரக்கனக்கானேரின் கையெழுத்துப்பெற்று மாவட்ட ஆட்சியரிடமும் சமர்ப்பிக்கப்பட்டது. மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களும் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
குடிநீர் வினியோகிக்கப்படும் நேரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் சில வழிமுறை சிக்கல்கள் இருப்பதால்; இது குறித்த முடிவு தாமதமாகியுள்ளது. எனவே நகரில் நிலவும் குடிநீர் பிரசனைக்கான தீர்வு குறித்து அனைத்து முயற்சிகளையும் இந்த நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது என்பதனை நகராட்சி சார்பாக பொது மக்களுக்கு தெரிவித்துகொள்கிறோம்.
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட, குடிநீரை காய்ச்சி குடித்திட, குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார் இணைப்பினை துண்டித்திட பொது மக்களின் ஒத்துழைப்பு கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும் நம் பகுதிகளில் நன்றாக மழை பெய்து இந்த குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை முழுவதும் நீங்கிட நாம் அனைவரும் இறைவனிடம் அனுதினமும் பிரார்த்தனை செய்வோம்.
இவண்,
காயல்பட்டணம் நகராட்சி.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |