நோன்புப் பெருநாளுக்காக தம் சொந்த ஊரான காயல்பட்டினம் வந்திருந்த அனைத்துலக காயல் நல மன்றத்தினருடன் இணைந்து கத்தர் - துபை - ரியாத் காயல் நல மன்றங்கள் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை, 22.08.2012 புதன்கிழமை மாலையில் நடத்தியுள்ளன.
இதுகுறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பல்வேறு நாடுகளில் தத்தம் பணி நிமித்தமாக பரவி வாழும் காயலர்கள், தாய் மண்ணின் நல்வாழ்விற்காக காயல் நல மன்றங்களை உருவாக்கி, தன்னிகரற்ற பல சேவைகளை செய்து வருவது நாம் யாவரும் அறிந்த ஒன்றே!
அப்படிப்பட்ட காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களை பரஸ்பரம் அறிமுகம் செய்துவைத்து, ஓர் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்து முகமான ஈத் மிலன் - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை அண்மையில் காயல் மாநகரில் நடந்து முடிந்தது.
கத்தர் காயல் நல மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியில் துபை, ,ரியாத், ஹாங்காங் மன்ற நிர்வாகிகளும் கைகோர்த்து, கடந்த புதன்கிழமை (22-08-2012) அன்று, காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள - தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் அவர்களின் ஜெம் பேலஸ் தோட்டத்தில் வைத்து இனிதே நடத்தின.
இந்த விழாவில் உலக காயல் நல மன்றங்கள் பலவற்றைச் சேர்ந்த முப்புதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மகிழ்வுடன் பங்கேற்றனர்.
மாலை ஐந்து மணிக்குத் துவங்கிய இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், ஐ.ஆபிதா ஷேக், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன் என்ற மம்மி ஹாஜியார், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகிய உறுப்பினர்கள் பங்கேற்றனர். தவிர்க்கவியலாத அலுவலில் இருப்பதாகக் கூறி, இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத உறுப்பினர்களான ஏ.லுக்மான், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் ஆகியோர் நிகழ்ச்சி சிறக்க தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இலங்கை காயல் நல மன்றத்தின் (காவாலங்கா) தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். கத்தர் நல மன்றத்தை சேர்ந்த கனிமுஹம்மத் இறைமறையை இனிது ஓதி, அருமையான நிகழ்வினை அழகுற துவங்கி வைத்தார். கவிமகன் காதர் கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.
துவக்கமாக, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம், இந்நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டு மன்றங்களின் பொறுப்பாளர்களது பெயர்களை வாசித்து அவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்ய, அப்பொறுப்பாளர்கள் தத்தம் பெயர் வாசிக்கப்படும்போது உற்சாகமாக கூட்டத்தினரை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
தொடர்ந்து ஸலீம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டனர்.
பின்னர் சிற்றுரையாற்றிய துபை காயல் நல மன்றத்தின் மூத்த நிர்வாகி ஹாஜி துணி உமர், வெளிநாட்டு மன்றங்களைச் சேர்ந்தவர்கள், தத்தம் விருப்பத்திற்கேற்றவாறு பல்வேறு கொள்கை அமைப்புகள், கட்சிகளை சார்ந்தவர்களாக இருப்பினும், ஊர் நலனைப் பொருத்த வரையில், ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். இந்த ஒன்றுகூடல், முழுக்க முழுக்க வெளிநாட்டு மன்றங்களால் நடத்தப்படுவதே என்றும், இதில் உள்ளூர் அமைப்புகள் எதற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின் தொடர்ச்சியாக. துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ சிறப்புரையாற்றினார்.
ஆண்டியானாலும், அரசன் ஆனாலும் அவரவர் கடமையை சரிவர செய்ய வேண்டும் என்பதை இஸ்லாம் மார்க்கம் கற்றுத் தந்திருப்பதை தனதுரையில் சுட்டிக் காட்டிய அவர், அனைத்துலக காயல் நல மன்றங்களைச் சேர்ந்த நமது மக்களை, இந்த விழா மூலமாக ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்காக இறைவனுக்கு நன்றி கூறினார்.
பூமியில் இருப்பவர்கள் மீது அன்பு செலுத்துபவர்களுக்கு, வானத்தில் இருந்து அன்பு பரிமாறப்படுகிறது என்றும், நாம் பிறந்த இந்த பூமிக்கு நன்றி செலுத்த, மனமாச்சர்யங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.
ஏழைகள் மீது காட்ட வேண்டிய அன்பு குறித்து அவர் பேசுகையில், ஏழைகள் அதிகமதிகம் சொர்க்கவாசிகளாக இருப்பதாகத் தெரிவித்தார்.
நகரில் பல்வேறு சேவைகளைத் திறம்பட செய்து வரும் வெளிநாட்டு காயல் நல மன்றங்கள், இந்த நகரத்தின் ஒற்றுமைக்காக என்றென்றும் பாடுபடும் என்று அவர் உறுதிபட கூறினார்.
அடுத்ததாக, நிகழ்வின் தலைவரும் - இலங்கை காயல் நல மன்றத்தின் (காவாலங்கா) தலைவருமான ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் உரையாற்றினார்.
பல முறை இந்த நகரத்திலும், மண்டலத்திலும் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி வாய்ப்புகள் இருந்த நிலையிலும் தான் போட்டியிட மறுத்துவிட்டதாகத் தெரிவித்த அவர், வணிக ரீதியாக கடந்த நாற்பது ஆண்டுகாலம் இலங்கையில் வசிப்பதைச் சுட்டிக்காட்டி, அக்கரையில் வாழ்ந்தாலும் இக்கரையில் தங்களுக்கு எப்போதும் அககறை உண்டு என்று கூறினார்.
வாழ்வின் பல்வேறு நிலைகளை, பணிகளை ஆகாய விமானத்துடன் ஒப்பிட்டுக் கூறிய அவர், எங்கெங்கோ பறந்து திரிந்தாலும், தாய்மண்ணில் தரை இறங்கித்தான் ஆகவேண்டும் என்றும், அப்படிப்பட்ட தாய் பூமியை சீரும் - சிறப்பானதுமாக காணும் ஏக்கம் ஒவ்வொரு காயலனுக்கும் உண்டு என்றும் கூறியதோடு, அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற நகர்மன்ற நண்பர்கள், தமது பங்களிப்பை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.
தொடர்ந்து கத்தர் காயல் நல மன்றத்தைச் சேர்ந்த கவிமகன் காதர் நன்றி கூற, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எஸ்.ஷேக்.தாவூத் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
விழாவின் நிறைவில், கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டியுபசரிப்பு செய்யப்பட்டது. காயல் நல மன்றங்களைச் சேர்ந்தோரும், காயல்பட்டினம் நகர்மன்றத்தைச் சேர்ந்தோரும் உவப்புடன் தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
நீண்ட நாட்கள் கழித்து ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிட்ட அனைத்துலக காயல் நல மன்றத்தினர் தமது மகிழ்ச்சிப் பெருக்கை உற்சாகத்துடன் வெளிப்படுத்தினர்.
விழா அரங்கத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் - கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம், ரியாத் காயல் நற்பணி மன்றத் தலைவர் மின்ஹாஜ் ஆகியோரது மேற்பார்வையில், காயல்பட்டினம் ஸ்டார் ரெடிமேட்ஸ் உரிமையாளரும், துபை காயல் நல மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான முத்து இஸ்மாஈல் சிறப்புற செய்திருந்தார்.
இந்நிகழ்வில்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன், அதன் முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ், அதன் அங்கத்தினரான எம்.ஷேக் அப்துல் காதிர், எஸ்.எஸ்.முபாரக், எம்.எஸ்.ஷேக் தாவூத், எம்.எம்.எஸ்.ஷேக் மொகுதூம், ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன், பி.எம்.ஐ.ஃபைஸல்,
கத்தர் காயல் நல மன்ற அங்கத்தினரான - சோனா முஹ்யித்தீன், ஏ.ஏ.செய்யித் முஹ்யித்தீன், ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர், ஹாஃபிழ் ஏ.எம்.எஸ்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன்,
துபை காயல் நல மன்ற அங்கத்தினரான - ஹாஜி டி.ஏ.எஸ்.மீரா ஸாஹிப், எச்.எஸ்.மூஸா நெய்னா, எஸ்.ஏ.கே.அப்துர்ரஸ்ஸாக்,
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ, அதன் அங்கத்தினரான ஹபீப் முஹம்மத் முஹ்ஸின், எம்.ஆதம் அபுல்ஹஸன்,
ஜித்தா காயல் நற்பணி மன்ற தலைவர் ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன்,
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை,
தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) பொருளாளர் எம்.எச்.முஹம்மத் ஸாலிஹ்,
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் அங்கத்தினரான ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் அலீ (48),
தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி பி.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் ஷாதுலீ,
மலேஷியாவில் வசிக்கும் எஸ்.செய்யித் அஹ்மத், ஜப்பானில் வசிக்கும் எம்.பி.எஸ்.செய்யித் அஹ்மத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு, நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் அனைத்துப் படங்களையும் தொகுப்புக் காட்சியாகக் காண இங்கே சொடுக்குக!
தகவல்:
கவிமகன் காதர் |