மருத்துவம் மற்றும் பொதுப்பணி சார்ந்த துறைகளுக்கும் “ஷிஃபா” என்ற பெயரில் இக்ராஃ போன்ற கட்டமைப்புடன் கூட்டமைப்பைத் துவக்கலாமென உலக காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கல்வித்துறையில் காயலர்களுக்கு செய்யப்படும் உதவிகளில் முறையான செயல்திட்டம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் - உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பாக காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் செயல்பட்டு வருவதைப் போல, உலக காயல் நல மன்றங்களின் மருத்துவம் மற்றும் இதர பொதுப்பணி சார்ந்த துறைகளுக்கும் கூட்டமைப்பை உருவாக்கி, முறையான செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்திட, 22.08.2012 அன்று நடைபெற்ற இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் உலக காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகள் வைத்த கருத்தின் அடிப்படையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஒருங்கிணைப்பில், 23.08.2012 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில், இக்ராஃ கல்விச் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது.
ஜித்தா காயல் நற்பணி மன்ற தலைவர் ஹாஜி குளம் எம். ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
ரியாத் காயல் நற்பணி மன்றத் தலைவர் ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன்,
கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம்,
துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம்,
சிங்கப்பூர் காயல் நல மன்ற பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை,
தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) பொருளாளர் எம்.எச்.முஹம்மத் ஸாலிஹ்,
ஜித்தா காயல் நற்பணி மன்ற அங்கத்தினர்களான ஹாஜி ஒய்.எம்.முஹம்மத் ஸாலிஹ், ஹாஜி எஸ்.எச்.அப்துல் காதிர், ஹாஜி எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக்,
ரியாத் காயல் நற்பணி மன்ற அங்கத்தினர்களான ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ, ஹாஜி ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ்,
தம்மாம் காயல் நற்பணி மன்ற அங்கத்தினர்களான ஹாஜி பி.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் ஷாதுலீ, ஜெ.செய்யித் ஹஸன், ஹாஜி பி.இம்தியாஸ், ஏ.ஹெச்.செய்யித் முஹ்யித்தீன்,
இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ்
ஆகியோர் பங்கேற்று கலந்தாலோசனை நடத்தினர்.
நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பாக செயல்பட்டு வரும் காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயல்திட்டத்தைப் போல - காயல் நல மன்றங்கள் மற்றும் உள்ளூர் சமூக ஆர்வலர்களைக் கொண்ட அதே கட்டமைப்புடன் “ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்” (SHIFA HEALTH AND WELFARE ASSOCIATION) என்ற பெயரில், மருத்துவம் - சிறுதொழில் உள்ளிட்ட பல்துறைகளுக்கான - உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பு ஒன்றை முறையாகத் துவக்கி, அதை காயல் நல மன்றங்கள் அளிக்கும் மருத்துவ உதவிக்கு மட்டுமின்றி அரசு வழங்கும் மருத்துவ உதவிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை நமது மக்களுக்கு கிடைக்கச்செய்திடும் பணிகளையும் மேற்கொள்ளச் செய்வது எனவும்,
அதற்கென சிறப்புப் பணியாளர்களை ஊதிய அடிப்படையில் நியமித்து செயல்படுத்தலாம் என்றும்,
அவ்வாறு இயங்கும் கூட்டமைப்பை இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது அவர்களின் மேற்பார்வையில் செயல்படுத்தலாம் என்றும் தீர்மானம் முன்வடிவு செய்யப்பட்டது.
இத்தீர்மான முன்வடிவை தத்தம் மன்றங்களின் கூட்டங்களில் முறையாக பரிசீலித்து இறுதி முடிவு செய்திடவும், அதன் பின் அனைத்து மன்றங்களையும் ஒருங்கிணைத்து, எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் கழித்து இத்திட்டத்தை செயல்படுத்திடவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இச்செயல்திட்டத்தை ஒருங்கிணைக்க, ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பாளராகவும்,
ஜெ.செய்யித் ஹஸன் (தம்மாம்),
கே.எம்.டி.ஷேக்னா லெப்பை (சிங்கப்பூர்),
ஹாஜி சாளை ஷேக் ஸலீம் (துபாய்),
கவிமகன் காதர் (கத்தார்),
ஹாஜி எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக் (ஜித்தா),
ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ (ரியாத்),
எம்.எச்.முஹம்மத் ஸாலிஹ் (பாங்காக்),
ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது,
எஸ்.கே.ஸாலிஹ்
ஆகியோர் அட்ஹாக் கமிட்டியினராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இத்திட்டம் குறித்து அட்ஹாக் கமிட்டியினர் அடுத்து கூடி கலந்து பேசி, இது குறித்த விரிவான தகவல் அறிக்கையை அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் அனுப்பிக்கொடுக்கலாமென்றும், உலக காயல் நல மன்றங்களால் இது குறித்து இறுதி முடிவு செய்யப்பட்ட பின்னர், இதற்கான இலச்சினையைத் தேர்வு செய்திட - பரிசுப் போட்டியொன்றை நடத்திடவும், அதற்கான பரிசுத்தொகையை துபை காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் அவர்கள் வழங்குவதாகவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக, ''தற்போது ஆன்-லைன் மூலம் மருத்துவ நிதி உதவிகள் சேகரித்து உதவி வரும் மைக்ரோகாயல் போன்று செயல் திட்டம் வகுக்கப்படுமா? அது சாத்தியமா? அதில் Privacy கடைபிடிக்கும் வகையில் அமைக்க முடியுமா? சாத்தியமெனில் அது குறித்து மைக்ரோ காயல் அட்மின் கருத்து என்ன?” என்று குறித்து விளக்கம் கோரப்பட்டது.
அதற்கு பதிலளித்த மைக்ரோ காயலின் அட்மின் ஜெ.செய்யது ஹசன், ''இன்று பேசப்பட்ட காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டத்திற்காகத்தான் தாம் முயற்சி செய்ததாகவும், இந்த அடிப்படையிலேயே தாம் மைக்ரோ காயலை வடிவமைத்ததாகவும், இந்த மருத்துவ உதவிக்கூட்டமைப்புக்கு எது மாதிரி தேவைப்படுகிறதோ அது மாதிரி வடிவமைத்துத் தந்து, தன்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்கிட ஆயத்தமாக உள்ளதாகவும், துவக்கப்படவிருக்கும் இந்த மருத்துவக் கூட்டமைப்பின் அலுவலகத்திற்குத் தேவைப்படும் கம்ப்யூட்டர் மற்றும் அது சார்ந்த பொருட்களை தாம் தந்துதவுவதாகவும் உறுதியளித்தார்.
அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், ஆது குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் விரிவாக கலந்தாலோசித்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் நன்றி கூற, துஆ - ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் மதியம் 02.00 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E.மஹ்மூது
அட்ஹாக் கமிட்டி உறுப்பினர். |