நகரின் நடப்பு குடிநீர் பிரச்சினை, அங்கீகரிக்கப்படாத இடங்களில் புதிய குடியிருப்புகள் உருவாவதைத் தடுத்திட கோருதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக நகரின் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம், காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் அதன் அலுவலகத்தில் 29.08.2012 அன்று இரவு 08.30 மணிக்கு நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை துணைத் தலைவர் சாளை முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாளப்பா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் நகரில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை குறித்தும், அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்தாலோசனை செய்யப்பட்டது.
அத்துடன், காயல்பட்டினம் 07ஆவது வார்டு - கற்புடையார் பள்ளி வட்டத்தில் அண்ணா நகர் என்றழைக்கப்படும் பகுதியில் நகராட்சியின் முறையான அனுமதி பெறப்படாமல் புதிய குடியிருப்புகள் கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, அது குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கலந்துகொண்டோரின் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அனுமதி பெறாத குடியிருப்புகளை அகற்றிட கோரிக்கை:
காயல்பட்டினம் நகராட்சியின் 07ஆவது வார்டு கற்புடையார் பள்ளி வட்டத்தில், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதியில், நகராட்சியின் முறையான அனுமதி பெறப்படாமல் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, அனுமதியின்றி - சட்ட விரோதமாக அக்குடியிருப்புகள் கட்டப்படும் பட்சத்தில், அவற்றை போர்க்கால அடிப்படையில் அகற்றி, நகரின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்த்திடுமாறு காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
அத்துடன், அரசால் சுனாமி குடியிருப்புகள் என புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, தமது பழைய குடியிருப்புகளைக் காலி செய்திட உத்தரவிடப்பட்ட பின்னரும், பலர் புதிய வீட்டையும் பெற்றுக்கொண்டு, ஏற்கனவே இருந்த தமது குடியிருப்புகளையும் காலி செய்யாமல் இருந்து வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, அவ்வாறு புதிய குடியிருப்புகள் வழங்கப்பட்டவர்களின் பழைய குடியிருப்புகளை உடனடியாக காலி செய்து, அவ்விடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சீரமைத்துத் தருமாறு காயல்பட்டினம் நகராட்சியை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2 - மோட்டார் கொண்டு குடிநீரை உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை:
காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதியிலும் அடி பம்புகள் மூலம் குடிநீர் எடுப்பதை விட்டு விட்டு, இன்று மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சும் நிலை சர்வ சாதாரணமாக உள்ளது. இதனால், நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை நேர்மையோடு பெற்றிட நினைக்கும் மக்களுக்கு சிறிதளவு கூட தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டு - அவர்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளனர்.
எனவே, நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை சட்ட விரோதமாக மின் மோட்டார் மூலம் உறிஞ்சுவோரை - காவல்துறையினர் துணையுடன் கண்டறிந்து, தயவு தாட்சண்யமின்றி அவர்களின் மோட்டார்களைப் பறிமுதல் செய்து, அவர்களுக்கு கடும் அபராதம் விதித்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளுமாறு காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 - இரண்டாவது பைப் லைன் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நிறைவேற்றல்:
காயல்பட்டினம் நகரின் குடிநீர் பிரச்சினையைப் போக்கிட பல்லாண்டு காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டதன் பலனாக இன்று இரண்டாவது பைப்லைன் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
இத்திட்டத்தை காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகமே மேற்கொள்ள நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பது கடும் வேதனையளிக்கிறது.
முறையான பொறியியல் வல்லுநர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், தேவையான கட்டமைப்புகள் எதுவுமே இல்லாத காயல்பட்டினம் நகராட்சி இத்திட்டத்தை பொறுப்பெடுத்து செய்ய தீர்மானித்திருப்பது இத்திட்டத்தை வீணாக்கி விடும் என இக்கூட்டம் கடும் அச்சம் தெரிவிக்கிறது.
இதுபோன்று இதற்கு முன் பல உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டங்கள் அனைத்தும் முறையான செயல்பாடுகளின்றி குறுகிய காலத்தில் வீணடிக்கப்பட்டதையும் இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.
எனவே, ஏற்கனவே நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நகர்மன்றத் தலைவர் - துணைத்தலைவர் - அனைத்து உறுப்பினர்களும் மறு பரிசீலனை செய்து, இதற்கான முறையான வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஏற்கனவே கொண்டுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் இத்திட்டத்தை நிறைவேற்றிட புதிதாக தீர்மானம் நிறைவேற்றி, பெறப்படவிருக்கும் இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டத்தை இந்நகர மக்களுக்கு முழு பயனுள்ளதாக அமையச் செய்திடுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரைக்குப் பின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அதன் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், தேமுதிக கட்சியின் நகர செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நகர கிளை தலைவர் ஜாஹிர் ஹுஸைன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகி ஏ.எஸ்.மக்கீ, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம், பொதுநல ஆர்வலர்களான டி.எம்.எஸ்.சுல்தான், எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாலிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில், அதன் ஆலோசகர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். |