காயல்பட்டினம் யூஃபா ஜூனியர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் - காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடத்தப்பட்ட 06ஆம் ஆண்டு கால்பந்து இறுதிப் போட்டியில் வென்று, யூஃபா ஜூனியர்ஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது.
30.08.2012 வியாழக்கிழமையன்று (நேற்று) மாலை 05.00 மணியளவில் துவங்கிய இறுதிப் போட்டியில், காயல்பட்டினம் யூஃபா ஜூனியர்ஸ் அணியும், நெல்லை யூத் அணியும் மோதின. இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பிக்கு இரு அணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
ஆட்டம் துவங்கிய 05ஆவது நிமிடத்தில், யூஃபா ஜூனியர்ஸ் அணி வீரர் அஸார் அற்புதமாக ஒரு கோல் அடித்ததன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி முன்னிலை பெற்றது. பின்னர், ஆட்ட நிறைவு வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், யூஃபா ஜூனியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில், தர்மராஜ், இஸ்மாஈல், ஜமால், இஸ்மாஈல் ஃபஹத், இஸ்மாஈல் புகாரீ ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
இரவு 07.00 மணிக்குத் துவங்கிய பரிசளிப்பு விழாவை மாணவர் ஹிஷாம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பாலப்பா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் பரிசளிப்பு துவங்கியது. துவக்கமாக, மேடையில் வீற்றிருந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டதுடன், சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இச்சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசு எல்.கே.சாக்கர்ஸ் அணியின் அஃப்ரஸ் என்ற வீரருக்கு கிடைத்தது. யூஃபா ஜூனியர்ஸ் அணியின் ஆஸாத் என்ற வீரருக்கு சிறந்த கோல் கீப்பருக்கான பரிசு வழங்கப்பட்டது.
பின்னர், இரண்டாமிடம் பெற்ற நெல்லை யூத் அணிக்கான கோப்பையை ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் கேப்டன் ஹபீப் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற யூஃபா ஜூனியர்ஸ் அணிக்கான சுழற்கோப்பையை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
இவ்விழாவில், ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவர் பீர் முஹம்மத், அதன் துணைச் செயலாளர் ஷாஹுல் ஹமீத், ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் கால்பந்து அணி முன்னாள் தலைவர் கேப்டன் ஹபீப், மாஷாஅல்லாஹ் தாவூத், புகாரீ ஆகியோரும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல் & படங்கள்:
S.B.B.புகாரீ |