மேல ஆத்தூரில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. வழமையாக தினசரி 20 லட்சத்திற்கும் கூடுதலான தண்ணீர் வழங்கப்படுவது உண்டு. தற்போது நிலவும் தட்டுப்பாடு காரணமாக, மேல ஆத்தூர் நீர்தேக்கத்தில் இருந்து தினசரி 11 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது என அந்த நீர் தேக்கத்தை பராமரிக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். வழங்கப்படும் அளவை நிரூபிக்கும் விதமாக - மேல ஆத்தூரில் நவீன மீட்டரும் பொருத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிக்கும் அளவில் குடிநீர் பெறப்படவில்லை என பல ஆண்டுகளாக காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள் கூறிவருகின்றனர். ஆனால் இதனை உறுதி செய்யும் விதமாக காயல்பட்டினம் நகர எல்லையில் மீட்டர் பல ஆண்டுகளாக பொருத்தப்படாமல் உள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 21 லட்ச லிட்டர் வழங்குவதாக கூறும்போது 16 - 17 லட்சம் லிட்டர் தான் வருகிறது என கூறிய காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள், தற்போது 11 லட்ச லிட்டர் வழங்கப்படும் போது
சில நாட்கள் முன்னர் வரை 9.5 லட்ச அளவில் தான் குடிநீர் பெறப்படுகிறது என தெரிவித்து வந்தனர்.
ஆனால் கடந்த மூன்று நாட்களாக - அதையும் விட குறைவாகதான் குடிநீர் பெறப்படுவதாக கூறுகின்றனர்.
காயல்பட்டினம் நகராட்சி அலுவலர் - ஆகஸ்ட் 28 இரவு முதல், 29 அதிகாலை வரை 6.2 லட்ச லிட்டர் தான் பெறப்பட்டது என கூறுகிறார். அதுபோல ஆகஸ்ட் 29 இரவு முதல், 30 அதிகாலை வரை 6.2 லட்ச லிட்டர் தான் பெறப்பட்டது என கூறுகிறார். ஆகஸ்ட் 30 இரவு முதல் 31 (இன்று) அதிகாலை வரை 7 லட்ச லிட்டர் தான் பெறப்பட்டது என கூறுகிறார்.
இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் விசாரித்ததில் - இவ்வாறு தண்ணீர் அளவு குறைய வாய்ப்பே இல்லையென்றும், தினமும் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை காயல்பட்டினத்திற்கு - நிமிடத்திற்கு 2000 லிட்டர் (2000 LPM) அளவில் - 11 லட்ச லிட்டர் அளவு தண்ணீர் - வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அனுப்பும் குடிநீர் - தினசரி 4 - 5 லட்சம் லிட்டர் வரை - எவ்வாறு மாயமாக மறைகிறது என்பது வியப்பாக உள்ளது.
தினசரி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அனுப்பும் தண்ணீரில் இது ஏறத்தாள 50 சதவீதம் ஆகும்.
காயல்பட்டினம் நகராட்சியில் இது குறித்து ஆய்வு செய்ய தகுந்த பொறியாளர்கள் இல்லை. மாவட்ட - மாநில அளவில், அரசாங்கம் தலையிட்டு
இந்த குளறுபடிக்கான காரணத்தை விசாரித்தால் தான், உண்மை நிலை வெளிவரும் என தெரிகிறது. |