காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர (சாதாரண) கூட்டம், 30.08.2012 அன்று மதியம் 03.30 மணிக்கு, நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 18 வார்டுகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். துவக்கமாக, கூட்டத்தில் கலந்துகொண்டதற்கான மாதப்பணம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு, கைச்சான்று பெறப்பட்டது.
கூட்டப் பொருள்:
ஜூன் 28 அன்று நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் - விவாதிக்கப்படாத பொருட்கள், ஜூலை 19 அன்று நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் - விவாதிக்கப்படாத பொருட்கள் உட்பட மொத்தம் 38 பொருட்கள் இம்மாத கூட்ட பொருளில் (அஜெண்டாவில்) இடம்பெற்றிருந்தது:
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில், நகர்மன்றக் கூட்டத்தை வீடியோ பதிவு செய்வதையும், ஊடகங்களைக் கட்டுப்படுத்துமாறு கூறியும் முந்தைய கூட்டங்களில் உறுப்பினர்கள் பலர் வெளிநடப்பு செய்ததைக் கருத்திற்கொண்டு, கூட்ட அரங்கில் வீடியோ கேமரா பொருத்தப்பட்டு, கூட்ட அரங்கிற்கு வெளியில் தொலைக்காட்சியும், ஸ்பீக்கரும், ஊடக நிருபர்கள் - பார்வையாளர்களுக்கு என நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
முந்தைய இரு கூட்டங்களில் ஊடகங்கள் கூட்ட அரங்கில் இருப்பதற்கு பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும், அதனை கருத்திற்கொண்டே இந்த ஏற்பாடு என்றும், ஒளிபரப்பு மட்டும் செய்யப்படும் என்றும், பதிவு செய்யப்படாது என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
இது குறித்த முடிவெடுக்காத வரை ஊடகங்கள் - பார்வையாளர்கள் வழமை போல் கூட்ட அரங்கில் இருக்கட்டும் என உறுப்பினர் லுக்மான் கருத்து கூறியதை தொடர்ந்து, நகர்மன்றத் தலைவரால் ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அடுத்த சில நிமிடங்களில் - பல தொலைக்காட்சி நிருபர்கள், தங்கள் காமிராவுடன் கூட்ட அரங்கிற்குள் நுழைந்தனர்.
நகர்மன்ற சார்பில் வீடியோ எடுக்க - கலாச்சாரத்திற்கு சரிவராது என காரணம் கூறி எதிர்த்த உறுப்பினர்கள் இந்த ஊடகங்களுக்கு மட்டும் ஏன் அழைப்பு விடுத்தீர்கள் என தலைவர் அப்போது வினவினார். பத்திரிக்கை நிருபர்களே கூட்ட செய்தி அறிந்து வந்திருப்பதாக சில உறுப்பினர்கள் கூறினர்.
பின்னர், கூட்டத்தைத் துவக்குமுகமாக கூட்டப் பொருள் வாசிக்க சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் ஆயத்தமாக, உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பிரச்சனைகளை எழுப்பத் துவங்கினர்.
கேள்விகளும், விளக்கங்களும்:
கூட்டப் பொருள் (அஜெண்டா) தயாரிப்பு:
நகர்மன்றத்தின் நடப்பு கூட்டத்திற்கான கூட்டப் பொருள் (அஜெண்டா) எங்கு தயாரிக்கப்பட்டது என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் துவக்கமாக கேள்வியெழுப்பினார்.
நகர்மன்ற அலுவலர்களால் இதுவரை தயாரிக்கப்பட்ட கூட்டப் பொருட்கள் பெரும்பாலும் அளவுக்கதிகமான பிழையுடன் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், பலமுறை தெரிவித்தும் அக்குறை சரிசெய்யப்படாததால், நகர்மன்ற அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட நடப்பு கூட்டப் பொருளை தான் பெற்று, தன் பொறுப்பில் - அதிலுள்ள பிழைகளைத் திருத்தி, அனைவருக்கும் வினியோகித்ததாக நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தெரிவித்தார்.
கோரிக்கைகள் புறக்கணிப்பு:
தாங்கள் அளித்த கோரிக்கைகள் கூட்டப் பொருளில் இடம்பெறாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.
அதற்கு விளக்கமளித்த நகர்மன்றத் தலைவர், கூட்டப் பொருள் தயாரிக்கப்படுவதற்கு முன்பு வரை உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் கூட்டப் பொருளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சேபனை தெரிவிக்கும் உறுப்பினர்களிடம் இருந்து எந்த கூட்ட பொருளும் பெறப்படவில்லை என்றும், ஊருக்கு நடக்கும் நலவுகள் விஷயத்தில் இருட்டடிப்பு செய்திட தனக்கு எந்த அவசியமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம் செய்த கட்சியுடன் பேச்சுவார்த்தை:
குடிநீர் பிரச்சனைகள் குறித்து நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த கட்சியினரை ஏன் முற்கூட்டியே சந்திக்க முயற்சி செய்யவில்லை என சிலர் கேள்வி எழுப்ப, ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளவர்களை சந்தித்து பேசலாம் என தான் கூறியதை பல உறுப்பினர்கள் எதிர்த்ததால் அம்முயற்சி கைவிடப்பட்டதாக நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
அவர்களை சந்தித்துப் பேசுவதை 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் மட்டும்தான் எதிர்த்தார் என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூறியதை மறுத்த உறுப்பினர் கேஜமால், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் உட்பட பல உறுப்பினர்களும் அதனை எதிர்த்தாகக் கூறினார். இதனால் இரு தரப்பு உறுப்பினர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
நகராட்சி குடிநீர் வினியோக விளக்கப் பிரசுரம்:
நகராட்சி குடிநீர் வினியோகம் தொடர்பாக அச்சடிக்கப்பட்ட நோட்டீஸை யாரிடம் கேட்டு அச்சடித்தீர்கள் என்று 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார். அதற்கு விளக்கமளித்த நகர்மன்றத் தலைவர், நோட்டீஸ்-க்கான வாசகங்கள் தன்னால் தயாரிக்கப்பட்டு, அது அச்சிடப்படுவதற்கு முன்னர் இறுதி முடிவு செய்வதற்காக உறுப்பினர்களிடம் தான் கலந்தாலோசித்ததாகவும், 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி அதில் தன் கைப்படவே திருத்தம் செய்து தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன் நகராட்சியின் சார்பில் பல்வேறு சுகாதார விழிப்புணர்வு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போதெல்லாம் ஒவ்வொன்றுக்கும் உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காத நிலையிலும் உறுப்பினர்கள் அவற்றுக்கு ஆட்சேபணை எதுவும் தெரிவிக்காமல், இன்று உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து அச்சடிக்கப்பட்ட பிரசுரம் தொடர்பாக ஆட்சேபிப்பது தேவையற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
விடுமுறையில் ஆணையர் இருந்ததால் அவரிடம் நோட்டீஸ் குறித்து கேட்கப்படவில்லை என்றும், நகராட்சியின் செயல்பாடு குறித்து மக்களுக்கு அனைத்து வழிகளிலும் விளக்கம் வழங்க நகராட்சித் தலைவருக்கு உரிமை உள்ளது என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டது எதேச்சையாக நடந்தது என்றும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.
அமைச்சருடன் சந்திப்பு:
தமிழக அரசின் அமைச்சர் ஒருவரை அதிகாலையில் சந்திக்க பயணம் செல்ல திட்டமிட்ட தலைவி, இரவு 11.25 மணிக்கு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக உறுப்பினர் லுக்மான் குற்றம்சாட்டினார்.
குத்தகைக்காரருக்கு லஞ்சம்:
ஆடறுப்புத் தொட்டி குத்தகை குறித்து பின்னர் பிரச்சனை எழுப்பப்பட்டது. குத்தகைதாரருக்கு குத்தகையை வாபஸ் வாங்க இருபதாயிரம் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக சில உறுப்பினர்கள் குற்றம்சாட்ட, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அவசியமில்லை என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
குத்தகைதாரர் கட்டிய பணத்தை வாபஸ் வழங்கும்போது - பெருவாரியான பணம் நகராட்சி மூலம் காசோலையாகவும், சுமார் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் வழங்கப்பட்டது. ரொக்க பணத்தை ஏன் உறுப்பினர் சம்சுதீன் வழங்கினார் என சில உறுப்பினர்கள் வினவினர். அதற்கு பதில் கூறிய வார்டு 13 உறுப்பினர் சம்சுதீன் - ஆணையரை காப்பாற்ற தான் வழங்கியதாகவும், அந்த தொகை தனக்கு திருப்பி தரப்பட்டுவிடும் என்றும் கூறினார்.
கூட்ட பொருட்கள் ஏதும் விவாதிக்கப்படாத நிலையில் - இதர பிரச்சனைகள் குறித்தே - காரசாரமாக விவாதங்கள் நடந்தது. ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழலும் நிலவியது.
வெளிநடப்பு:
இறுதியாக, 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் ஆகிய நான்கு உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்புக்கான காரணங்கள்:
வெளிநடப்புக்கான காரணங்கள் எழுதப்பட்டு பின்னர் 14 உறுப்பினர்களின் கைச்சான்று பெறப்பட்டது. காரணங்களாக தெரிவிக்கப்பட்டவை வருமாறு:-
1. 25.08.2012 அன்று நகர்மன்றத் தலைவர் வெளியிட்ட நோட்டீசுக்கு எதிர்ப்பு
2. தலைவியின் தன்னிச்சை முடிவுகளை எதிர்ப்பு
3. கூட்டப்பொருள் நகராட்சி அலுவலகத்தில் தயார் செய்யாமல் வெளியில் தயார் செய்யப்பட்டதையும், சில உறுப்பினர்களின் பொருள் சேர்க்காமல் விடப்பட்டதையும் கண்டிப்பு
கூட்டத் துளிகள்:
பார்வையாளர்கள்:
இக்கூட்டத்தில், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான், துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம், அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஜி டி.ஏ.எஸ்.மீரா ஸாஹிப், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ, நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி ஸதக்கத்துல்லாஹ் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
ஊடகங்களுக்கு தலைவர் - உறுப்பினர்கள் பேட்டி:
கூட்டம் முடிவுற்ற பின்னார் உறுப்பினர்கள் பலர், நகர்மன்ற வளாக வாயிலில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர்.
கூட்டரங்கிலிருந்தவாறு நகர்மன்றத் தலைவரும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
கூட்ட நடப்புகள், உறுப்பினர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பேட்டிகள் ஆகியவற்றின் அசைபட (வீடியோ) தொகுப்பு விரைவில் வெளியிடப்படும்.
[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 19:38/02.09.2012] |