ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அளவு செப்டம்பர் 01ஆம் தேதி (நாளை) முதல் அதிகரிக்கப்படுகிறது.
காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு மேலாத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சுத்திகரிப்பு மற்றும் குடிநீரேற்று நிலையத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அணைகளில் நீர் குறைவாக இருந்ததாலும் நீர் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதாலும் இங்குள்ள குடிநீர் தேக்கத்திற்கு பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை இல்லாமலிருந்தது. அதனால் அங்குள்ள நீர்தேக்கத்திலுள்ள நீரை பகிர்ந்தே மேற்கண்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.வழக்கமாக வினியோகிக்கப்படும் அளவை விட 50 சதவீதத்திற்கும் குறைவாக நீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டப்பாடு நிலவியது.
இந்நிலையில் செப்டம்பர் 01ஆம் தேதி முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அளவு அதிகரிக்கப்படுகிறது என மேலாத்தூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பொறியாளர் பால சுப்பிரமணியன் இன்று மாலையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
காயல்பட்டினம் நகராட்சிக்கு 11 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டு வந்தது 12 லட்சம் லிட்டராக வழங்கப்படும். காயல்பட்டினம் பகுதிக்கு தட்டுப்பாடு இல்லாத நேரம் 23 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டது.
ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதிக்கு பத்து லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது சனிக்கிழமை முதல் 11 லட்சம் லிட்டராக வழங்கப்பட உள்ளது. ஆறுமுகனேரிக்கு குடிநீர் பிரச்சனை இல்லாத நிலையில் 21 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் பகுதிக்கு 15.4 லட்சம் வழங்கப்பட்டு வந்தது பற்றாக்குறையினால் வெள்ளிக்கிழமை வரை 7லட்சம் லிட்டரே வழங்கப்பட்டு வந்தது. சனிக்கிழமை முதல் 8 லட்சம் விட்டர் குடிநீர் வினியோகிக்கப்படும்.
ஆத்தூர் பேரூராட்சி மன்ற பகுதிக்கு முழு அளவாக 6.84 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டு வந்தது பற்றாக்குறையினால் வெள்ளிக்கிழமை வரை 3 லட்சம் லிட்டரே வினியோகம் செய்யப்பட்டது. சனிக்கிழமை முதல் 3.25 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.
தற்போது ஸ்ரீவைகுண்ட்ம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் குடிநீர் வினியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அணைக்கட்டுகள் பகுதியில் மழை பெய்து சுமார் 5 அடிக்கு மேல் கூடி, ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் முழு அளவு குடிநீர் வினியோகம் செய்ய இயலும் என்றார் பொறியாளர் பாலசுப்பிரமணியன். |