தம்மாம் காயல் நற்பணி மன்றம் நடத்திய - காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி முதலிடம் பெற்றுள்ளது. விபரம் பின்வருமாறு:-
அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி:
பள்ளி மாணவ-மாணவியரிடையே புதைந்து கிடக்கும் அறிவியல் திறனை வெளிக்கொணரும் நோக்குடன், சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பில் - நகர பள்ளிகளுக்கிடையிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
நகர பள்ளிகள் பங்கேற்பு:
இரண்டாமாண்டு போட்டி, 25.08.2012 சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மற்றும் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய - காயல்பட்டினம் நகரின் பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.
தத்தம் பள்ளிகளுள் தனித்தனியே போட்டி நடத்தி, அதில் சிறப்பிடம் பெறும் மாணவ-மாணவியரை கண்காட்சிப் புாட்டியில் பங்கேற்கச் செய்யுமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர்.
காட்சிப் பொருட்கள்:
பார்வையற்றோருக்கான ஊன்றுகோல், பார்வையற்றோருக்கான தடுப்புணரி, எரிவாயு கசிவைக் கண்டறிதல், காடுகளை அழிப்பதால் ஏற்படும் இழப்புகள், காற்றாலை மின் உற்பத்தி, கைபேசி கோபுரங்களால் ஏற்படும் கதிரியக்க பாதிப்புகள், பள்ளி மாணவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி மாணவ-மாணவியர் அறிவியல் பொருட்களை உருவாக்கியிருந்தனர்.
சிறப்பு விருந்தினர்:
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் எஸ்.ஆறுமுகம் பிள்ளை, மாணவ-மாணவியரின் அறிவியல் பொருட்களைப் பார்வையிட்டு, பல்வேறு கேள்விகளைக் கேட்டு, மதிப்பீடு செய்தார். மாணவ-மாணவியர் உற்சாகத்துடன் தமது அறிவியல் செய்முறைகளை செய்து காண்பித்தனர்.
பரிசளிப்பு விழா:
பின்னர், மதியம் 01.00 மணியவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அரிமா சங்கத்தின் மண்டல தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் விழாவிற்குத் தலைமை தாங்கினார். தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாஸ்டர் அதாவுல்லாஹ் இம்தியாஸ் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். நிகழ்வுகளை நெறிப்படுத்திய தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் பி.இம்தியாஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழா தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினரான - பெட் பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் எஸ்.ஆறுமுகம் பிள்ளை சிறப்புரையாற்றினார்.
மாணவ-மாணவியரின் உற்சாகத்துடன் கூடிய அறிவியல் செய்முறைகளைப் பாராட்டிப் பேசிய அவர், இருக்கும் அறிவியலைக் கொண்டு பொருட்களை ஆயத்தம் செய்வதைத் தவிர்த்து, தமது அறிவியல் அறிவைக் கொண்டு புதிதாக கண்டுபிடிப்புகளை உருவாக்கிட மாணவ-மாணவியர் முயற்சி செய்ய வேண்டுமென்றும், அதுதான் இக்கண்காட்சிப் போட்டியின் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
முதல் மூன்று பரிசுகள்:
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. இக்கண்காட்சிப் போட்டியில் முதலிடம் பெற்ற எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 09ஆம் வகுப்பைச் சேர்ந்த எம்.ஏ.கே.சித்தி மதனீ, பி.எம்.ஷேக் ஜாபிரா, டி.டி.மைமூன் மர்யம் ஆகிய மாணவியருக்கு, சிறப்பு விருந்தினர் பணப்பரிசு, சான்றிதழ், பள்ளிக்கான சுழற்கேடயம் ஆகியவற்றை, சிறப்பு விருந்தினர் பேராசிரியர் எஸ்.ஆறுமுகம் பிள்ளை வழங்கினார்.
இரண்டாமிடம் பெற்ற முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் எம்.பி.ஏ.அஹ்மத் ஜமால், எஸ்.எம்.பி.ஹபீப் முஹம்மத், பி.என்.சாமு ஷிஹாப்தீன் ஆகிய மாணவர்களுக்கு விழா தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
மூன்றாமிடம் பெற்ற சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் எம்.ஏ.இப்றாஹீம் ஸில்மியா, எச்.ஆர்.ஃபாத்திமா ஃபஸீலா, கே.ஆர்.எம்.ரஹ்மத் நஸ்ரிய்யா, ஏ.எஸ்.ஆஸியா ஃபழீலா ஆகிய மாணவியருக்கு, முன்னிலை வகித்த ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
அனைவருக்கும் சான்றிதழ்கள்:
அதனைத் தொடர்ந்து, இக்கண்காட்சிப் போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருக்கான சான்றிதழ்கள் அந்தந்த பள்ளியின் பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டது.
நினைவுப் பரிசுகள்:
பின்னர், விழாவின் சிறப்பு விருந்தினர் - தலைவர் - முன்னிலை வகித்தோர் அனைவருக்கும் நினைவுப் பரிசுள் வழங்கப்பட்டன.
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி பி.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் ஷாதுலீ நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பரிசளிப்பு விழாவில், அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருடன் அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள் - ஆசிரியர்கள் - பெற்றோர் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு:
விழா ஏற்பாடுகளை, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் உறுப்பினர் செய்யித் முஹ்யித்தீன் ஒருங்கிணைப்பில், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், அதன் துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஆசிரியையர் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். |