காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்மொழிய தீர்மானமியற்றப்பட்டது.
அதனடிப்படையில், மாதந்தோறும் கடைசி புதன்கிழமைகளில் இக்கூட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி நடைபெற்று வருகிறது.
ஜூலை மாதத்தில் மக்கள் குறைதீர் மாதாந்திர கூட்டம் நடத்தப்படவில்லை. நடப்பு ஆகஸ்ட் மாதத்திற்கான (ஆறாவது) கூட்டம், 29.08.2012 புதன்கிழமையன்று மதியம் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகராட்சியின் சேவைக் குறைபாடுகள் குறித்த விண்ணப்பங்களைப் பெற்றிடுவதற்காக ஆணையர் அஷோக் குமார், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், குடிநீர் குழாய் பொருத்துநர் நிஸார் ஆகியோர் காத்திருந்தனர். கூட்டம் துவங்கிய நேரம் முதல் முடிவடையும் நேரம் வரை ஒரு விண்ணப்பமும் பெறப்படாமலேயே கூட்டம் நிறைவுற்றது. |