திருச்செந்தூர் வட்டார அளிவலான மற்றும் தூத்துக்குடி கல்வி மாவடட அளிவலான கால்பந்துப் போட்டிகளில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது.
08.08.2012 அன்று நடைபெற்ற - 19 வயதுக்குட்பட்டோருக்கான திருச்செந்தூா வட்டார அளவிலான கால்பந்துப் போட்டியில், வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் பள்ளி அணியை எதிர்த்து ஆடிய காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
10.08.2012 அன்று திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி அணியும், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இதில், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, வட்டார அளவிலான கோப்பையைத் தட்டிச் சென்றது.
அதுபோல, 24.08.2012 அன்று நடைபெற்ற - 19 வயதுக்குட்பட்டோருக்கான தூத்துக்குடி கல்வி மாவட்ட அளவிலான கால்பந்துப் அரையிறுதிப் போட்டியில், தூத்துக்குடி புனித தாமஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி அணியை எதிர்த்தாடிய காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டியில், நாசரேத் மர்காஷிஸ் மேனிலைப்பள்ளி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, கேடயத்தைத் தட்டிச் சென்றதுடன், மண்டல (டிவிஷனல்) அளவிலான கால்பந்துப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
வெற்றிபெற்ற சென்ட்ரல் மேனிலைப்பள்ளி அணி வீரர்களை, அப்பள்ளியின் தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், தலைமையாசிரியர் கோ.ஹாஜா முகைதீன், உதவி தலைமையாசிரியர் கே.ஷாஹுல் ஹமீத், உடற்கல்வி ஆசிரியர் ஜெ.டிக்சன் பர்னாந்து மற்றும் பள்ளி ஆசிரியர்கள் - அலுவலர்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.
தகவல்:
ஆசிரியர் அஹ்மத் சுலைமான்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்.
படம்:
வீனஸ் ஸ்டூடியோ |