தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம், அந்நாட்டிலுள்ள ரயாங் கடற்கரை சுற்றுலா தளத்தில், திரளான உறுப்பினர்களின் பங்கேற்புடன் புதுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, தக்வா செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வாவின் பொதுக்குழுக் கூட்டம் 26-08-2012 ஞாயிறு மாலை ரயாங் கடற்கரை சுற்றுலாத் தளம் P.M.Y. RESORT COTTAGE புள் வெளியில் தலைவர் வாவு M.M. ஷம்சுத்தீன் ஹாஜி தலைமையில் நடைப் பெற்றது. சிறப்பு விருந்தினர் M.K.S முஹம்மது ஹசன் ஹாஜி முன்னிலை வகித்தார். ஹாபில் லியாவுத்தீன் இறைமறையிலிருந்து சில வசனங்களை ஓத, N.S ஹனீபா வரவேற்புரையாற்றினார்.
வாவு ஷம்சுத்தீன் ஹாஜி தலைமையுரையில், "கடற்கரை சுற்றுலா மையத்தில் பசுமை மிகுந்த, குற்றாலம் போன்ற சாரல், தென்றல், குளுமை மிக்க இந்த இடத்தில் ஒரு பொதுக் குலுக்கூட்டதை நடத்துவதற்காக ஒரு இன்பச் சுற்றுலாவையும் இணைத்து செய்ய தேர்ந்தெடுத்து நல்ல உழைப்பு செய்த தம்பிமார்கள் M.H. புஹாரி, N .S. ஷேக்,N.S. ஹனீபா, கலகலப்பு கதாநாயகன் M.I.அப்துல் வஹாப் ஆகியோர் பாராட்டுக்குரியர்வர்கள்.
நம் தக்வா மன்றம் பல நல்ல திட்டங்களுக்கு முன்னோடியாகவும், பல திட்டங்களுக்கு உறுதுணையாகவும் இருந்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. நம்மூரில் கல்லாமை,இல்லாமை ஒழிய கல்வியின் அவசியம் கருதி கல்விக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இல்லாமையால் யாரும் கல்வியை இழக்கக் கூடாது என்பதற்காக இல்லாதவர்களுக்கு உதவ இக்ரா என்ற அமைப்பை ஏற்படுத்தி அது கல்வியில் பெரும் புரட்சியை செய்வதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு புதிய தலைவர் உலக காயல் மன்றங்களினால் சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படுகிறார். அதன் அடிப்படையில் இவ்வாண்டு தக்வாவின் தலைவராகிய என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இக்ரா எளிவர்களுக்கு உதவுதலுடன், நம் ஊர் கல்வி வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களைச் செய்துவருகிறது என்பதும் நீங்கள் அனைவரும் அறிந்ததே. இக்ரா மேலும் பல நல்ல சேவைகள் செய்ய வேண்டுமானால் அதற்கென ஒரு தனி இடம் சொந்த கட்டிடத்தில் இருப்பது அவசியம்.அதற்கான முயற்சி நடைப் பெற்று வருகிறது.
ஊரின் மையத்தில் ஏதும் இடம் இருந்தால் இக்ராவிற்கு தகவல் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இன்றைய சூழலில் குறைந்தது 30 லட்சம் தேவைப் படுகிறது. இந்த நிதியை நன்கொடையாகவும் ஆயுள் சந்தா மூலமும் திரட்ட முடிவு செய்துள்ளோம். எனவே நம் தக்வா உறுப்பினர்கள் ஆயுள் சந்தா உறுப்பினர்களாக இணையும்படி அன்பாய் வேண்டிக் கொள்கிறேன்.
அத்துடன் ஏழை மாணவர்கள் உயர் கல்விக்காக உதவி கோரி விண்ணப்பித்து 55 மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது வரை 30 மாணவர்களுக்குத்தான் அனுசரணை வந்துள்ளது. நம் தக்வாவின் மூலம் ஆண்டுதோறும் 5 மாணவர்களுக்கு அனுசரணை செய்வது உங்கள் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். மேலும் 25 மாணவர்களுக்கு அனுசரணை தேவைப் படுவதால் அங்கத்தினர்கள் தனியாக அனுசரணை செய்யலாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசினார்.
அடுத்து பேசிய செயலாளர் M.S. செய்யது முஹம்மது அவர்கள் "தக்வாவின் கூட்டத்தை வித்தியாசமான முறையில் இன்பமான இடத்தில் நடத்தவேண்டும் என்று ஆர்வப்பட்டு அழகான முறையில் இன்பச் சுற்றுலாவையும் அமைத்துத் தந்த தம்பி S.A.R. யூனுஸ், வாவு காதர் சாஹிப் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். குறிப்பாக அப்துல் வஹாப் நிறைய பொழுது போக்கு அம்சங்களுடன் குழந்தைகளை மிகவும் கவர்ந்துவிட்டார். குழந்தைகளின் ஆனந்தக் கொண்டாட்டத்தைப் பார்க்க நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
தற்போது நம் தக்வா உறுப்பினர்களிடையே நம் ஊர்த் திட்டங்களில் முனைப்பாக செய்யவேண்டும் என்ற ஆர்வம் மிகைத்துள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாண்டு நம்மால் முன்மொழியப்பட்ட இமாம் - பிலால்களுக்கான நோன்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் சிங்கப்பூர், ரியாத், அபுதாபி, U.K., இலங்கை மன்றங்களின் ஒத்தாசைகளுடன் இனிதே நிறைவேறியுள்ளது. அந்த மன்றங்களுக்கு நம்முடைய நன்றியை உரித்தாக்குகிறேன்.
இவ்வாண்டு நம் தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜி அவர்களை உலக காயல் நல மன்றங்கள் தேர்ந்தெடுத்திருப்பது நம் தக்வா ஊர் நலப்பணிகளில் அதிக ஆர்வமும் பங்களிப்பும் செய்திருப்பதின் பலன்தான். அவர்கள் பொறுப்பில் இருக்கும் இந்த ஓராண்டிற்குள் இக்ராவிற்கு ஒரு இடத்தை வாங்க வேண்டும் என்று மிகவும் முனைப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் கனவு நனவாக நாம் செய்ய வேண்டிய உதவி நாம் அனைவரும் இக்ராவின் ஆயுள் கால சந்தாதாரர் ஆகி விடவேண்டியதான். மேலும் அவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க, ஏழை மாணவர்களுக்கு அனுசரணை செய்யவும் முயலுங்கள். யார் ஒரு நல்ல காரியத்தை துவங்கி வைக்கிறாரோ அவருக்கு அவரைத் தொடர்ந்து செய்பவர்களின் நன்மையும் சேர்ந்து கிடைக்கும் என்பது நபி மொழி. யார் யார் ஆயுள் கால உறுப்பினர்களாக ஆக விரும்பு கிறீர்கள் என்று சொல்லுங்கள்" என்று சொன்னதும், முதன் முதலாக உதவித் தலைவர் வாவு A.S. முஹம்மது அலி, தான் ஆயுள் கால உறுப்பினராகவும், ஒரு மாணவர்க்கு 3 ஆண்டுகளுக்கு அனுசரணை செய்வதாகவும் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து வாவு உவைஸ் அவர்களும் அதே மாதிரியான அறிவிப்பைச் செய்தார். இவர்களைத் தொடர்ந்து மேலும் 10 பேர் தாங்கள் ஆயுள் கால சந்தா உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் தலைவர் நன்றி தெரவித்தார்.
அதனைத் தொடர்ந்து S.A.R. யூனுஸ், K.M. முஹம்மது அலி ,M.B.ஷேய்க், M.I. அப்துல் வஹாப் ஆகியோர் தக்வாவின் நலப் பணிகளைப் பாராட்டியும், வருடத்திற்கு ஒரு முறையேனும் கண்டிப்பாக தொலை தூரத்தில் 3 நாட்களுக்கு குறைவில்லாமல் சுற்றுலா செல்ல வேண்டும் என்றும், முடிந்த வரையில் ஷவ்வால் 6 நோன்பு கழிந்த உடன் வைக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறினர். அடிக்கடி சுற்றுலா வைத்தால்தான் எல்லோருடனும் வயது வித்தியாசம் இன்றி மனம் விட்டு பழக முடிகிறது என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து உதவிச் செயலாளர்கள் இருவரில் ஒருவர் தொழில் நிமித்தம் வெளி நாடு மாறி சென்று விட்டதனாலும் மற்றொருவர் தன் சொந்தக் காரணத்திற்காக ராஜினாமா செய்து விட்டதனாலும் அவர்கள் இடத்திற்கு S.A.R. முஹம்மது யூனுஸ் மற்றும் M.H. அபுல் மாலி ஆகியோர் உதவிச் செயலார்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
இறுதியாக ஃபியாஸ் இத்ரீஸ் நன்றி நவில ஷாதுலி ஆலிம் அவர்களின் துவாவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் உறுப்பினர்கள் வழமைக்கு மாற்றமாக பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான் & ஃபியாஸ் இத்ரீஸ் |