காயல்பட்டினம் நகரின் பல்லாண்டு கால கனவான 2ஆவது பைப் லைன் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான டெண்டர் - ஒப்பந்தப்புள்ளி நேற்று திறக்கப்பட்டுள்ளது.
தவறான முறையில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் வீடுகளைக் கண்டறிந்து, அவ்வாறு தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்படும் மின் மோட்டர்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் படி நகராட்சியால் இன்று துவக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நடைமுறைக் குறைகளைக் களைந்து - சீரான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சென்னையிலுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஏகாம்பரம் ஐ.ஏ.எஸ்.-ஐ, 16.05.2012 அன்று சென்னையில் சந்தித்துப் பேசினார்.
அவரது அறிவுரையின் பேரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி செயற்பொறியாளர் ஆர்.சங்கரன், ஆத்தூர் குடிநீரேற்று நிலைய துணைப் பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோர், 31.05.2012 அன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சிக்கு வருகை தந்தனர்.
அன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், நகராட்சியின் குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் உள்ளிட்ட அதிகாரிகளிடம், நகராட்சியின் குடிநீர் வினியோக முறை குறித்து கேட்டறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்,
தயவுதாட்சண்யமின்றி, மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவோரின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தல், அவர்களுக்குத் தண்டனை வழங்கல், அவர்களது குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல் உள்ளிட்ட முறையான நடவடிக்கைகளை நகர்மன்றம்தான் மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்த நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களது (கவுன்சிலர்கள்) முழுமையான ஒத்துழைப்பு இன்றியமையாதது...
என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை நகர்மன்றத்திற்கு வழங்கினர். அதன் தொடர்ச்சியாக, மின் மோட்டார் கொண்டு முறைகேடாக குடிநீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் அறிவித்திருந்தார்.
இது தவிர, மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறும், முறைகேடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகரின் அனைத்து வீதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் பரப்புரை செய்யப்பட்டது.
இந்நிலையில், மின் மோட்டார் மூலம் முறைகேடாக தண்ணீர் உறிஞ்சுவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணி காயல்பட்டினம் நகராட்சியால் இன்று காலை துவக்கப்பட்டுள்ளது.
துவக்கமாக, காயல்பட்டினம் மேலப்பள்ளி தெருவில், நகராட்சி ஆணையர் அஷோக் குமார், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு, நான்கு முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 4 வீடுகளில் மின் மோட்டர்களைப் பறிமுதல் செய்து எச்சரித்து சென்றனர்.
தற்போது, பெரிய நெசவுத் தெருவில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. |