தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் வரை கிழக்கு கடற்கரை சாலை நீட்டிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சுமார் 119 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பாதையை அமைக்க, தமிழக அரசு சுமார் 257 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தீட்டிவுள்ளது.
இந்த சாலை, முத்தையாபுரம், முக்காணி, ஆத்தூர், திருச்செந்தூர், குலசை, மணப்பாடு, பெரியதலை - வழியாக அமையும் என காயல்பட்டணம்.காம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழக நெடுஞ்சாலை துறையிடம் இருந்து வினவியிருந்த கேள்விக்கு, பதில் வழங்கப்பட்டுள்ள செய்தி - சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
தற்போது இப்பாதை குறித்த விவரம் - வரைப்படம் வடிவில் - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. அதன் மூலம் கீழ்க்காணும் தகவல்கள் பெறமுடிகிறது:
தூத்துக்குடியில் இருந்து துவங்கும் இப்பாதை ௦ மீளவிட்டான் ௦- துறைமுகம் ரயில் பாதை, மதுரை - துறைமுகம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு, உப்பத்து ஓடை மேல் அமைந்துள்ள பாலம், முத்தையாபுரம் வரை - 6 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிப்பாதையாக இருக்கும்.
அதன் பிறகு இப்பாதை - முள்ளக்காடு வழியாக இரு வழிப்பாதையாக தொடரும். பழையகாயலுக்கு அருகே - கிழக்கு பகுதியில் - சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு குறுக்கு சாலை அமைக்கப்படுகிறது.
அதன்பிறகு இப்பாதை முக்காணி கிராமம் வழியாக தொடர்ந்து, ஆத்தூர் - தாமிரப்பரணி ஆற்றின் மேல் உள்ள பாலத்தை அடைகிறது. அங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு - மேற்கு திசையில் குறுக்கு சாலை அமைக்கப்படுகிறது. இப்பாதையில் ஒரு ரயில் பாலம் புதிதாக அமைக்கப்படும்.
இக்குறுக்கு சாலை அமைவதால் - கிழக்கு கடற்கரை சாலை - ஆறுமுகநேரி, காயல்பட்டினம், வீரப்பாண்டியப்பட்டினம் ஆகிய ஊர்களை தொடாமல் - திருசெந்தூரின் தென் - மேற்கு பகுதியை அடையும். அங்கு திருநெல்வேலி செல்லும் மாநில நெடுஞ்சாலை 40 மற்றும் வள்ளியூர் வழியாக நாகர்கோயில் செல்லும் 8H நெடுஞ்சாலையையும், கிழக்கு கடற்கரை சாலை தொடும்.
அங்கிருந்து தொடரும் இவ்விருவழிப்பாதை குலசேகரப்பட்டினத்துடன் நிறைவு பெறும்.
அங்கிருந்து ஒரு வழிப்பாதையாக, இச்சாலை தொடர்ந்து மணப்பாட்டை அடையும். மணப்பாட்டில் கரமணி ஆற்றின் அருகில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு குறுக்கு சாலை அமைக்கப்பட்டு, அழகப்பாபுறத்தை இச்சாலை அடையும்.
அழகப்பாபுறத்திலும், சித்தன் குடியிருப்பிலும் - தற்போதிருக்கும் சாலையில் இருந்து சிறிது மாறி சாலை அமைக்கப்பட்டு, பெரியதலையை அடையும். பெரியதலையில் சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு குறுக்கு சாலை அமைக்கப்படும்.
மொத்தம் 119 கிலோமீட்டர் நீளத்தில் அமைய உள்ள இச்சாலை, தூத்துக்குடி மாவட்டத்தில் 67 கிலோமீட்டர் நீளம் வரை (பெரியதலை) அமையும்.
இச்சாலை பெரும்பாலும் - தற்போது அமைந்துள்ள மாநில நெடுஞ்சாலை 176 - யை தொடர்ந்தே இருக்கும்.
|